பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜூன், 2014

இலங்கையின் 3000 மில்லியன் ரூபாய் நிதியீட்டத்துடன் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் இரண்டாம் கட்டப்பணிகள் ஆரம்பம்
 
இலங்கையின் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இலக்குவைத்து, பரந்துபட்ட மக்கள் நலன்புரி நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டப்பணிகளுக்காக சுமார் 3000 மில்லியன் ரூபாய்களை லைகாவின் ஞானம் அறக்கட்டளை ஒதுக்கியிருக்கிறது.
மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வாழ்வாதார மூலத்தினை ஏற்படுத்திக் கொடுத்தல், கல்வி மேம்பாட்டினை ஏற்படுத்தல் போன்ற ஆக்கபூர்வமான பல திட்டங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இரண்டாம் கட்டப்பணிகள் ஞாயிற்றுக்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பாரிய நிதியீட்டத்துடன் கூடிய பன்முகப்படுத்தப்பட்ட மக்கள் நலன்புரித் திட்டங்களுக்காக அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், புத்தளம், பொலனறுவை, திருகோணமலை மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு, இந்தப் பணிகளைக் கையாளுவதற்காக எட்டு மாவட்டக் காரியாலயங்களும் ஆரம்பித்து வைக்கப்படுகின்றன.
இவற்றில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டக் காரியாலங்கள் நேற்றும் நேற்றுமுன் தினமும் லைகாவின் ஞானம் அறக்கட்டளையின் போஷகர் திருமதி ஞானாம்பிகை அல்லிராஜா, லைகாவின் ஞானம் அறக்கட்டளை மற்றும் லைகா மொபைல் நிறுவனத்தின் தலைவர் திருவாளர் அல்லிராஜா சுபாஸ்கரன், லைகா மொபைல் நிறுவனத்தின் பிரதித் தலைவர் திருவாளர் பிறேம் சிவசாமி மற்றும் லைகா மொபைல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கிறிஸ் டூலி ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.