பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூன், 2014


ஈராக்கில் உள்நாட்டு போர்: 40 இந்தியர்கள் கடத்தப்பட்டதால் பரபரப்பு: சிறப்பு தூதர் பாக்தாத் பயணம்
உள்நாட்டு போர் வெடித்துள்ள ஈராக்கில் 40 இந்தியர்களை தீவிரவாதிகள் பிடித்துச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை நேரில் கண்காணித்து தேவையான மீட்பு நடவடிக்கையை
மேற்கொள்ள இந்திய தூதர் பாக்தாத் சென்றுள்ளார்.


உள்நாட்டு போர் காரணமாக ஈராக்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். மொசூல் நகரில் இருந்து 40 கட்டுமான தொழிலாளர்களான இந்தியர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட இருந்தபோது, தீவிரவாதிகள் அவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் கிடைத்த மத்திய அரசு அதிர்ச்சி அடைந்ததுடன், உடனடியாக ஈராக் அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் இந்த விஷயம் குறித்து கேட்டறிந்தனர்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பரூதின், ஈராக்கில் உள்ள இந்திய தூதரகத்தை வலுப்படுத்த முடிவு செய்து, அதற்காக பழுத்த அனுபவம் கொண்ட தூதரக அதிகாரியான சுரேஷ் ரெட்டி அங்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் இன்று பாக்தாத் சென்று இந்தியர்களை பாதுகாக்கும் பணிக்கு உதவி செய்வார். ஏற்கனவே ஈராக்கில் பணியாற்றிவர் என்ற வகையில், பிரச்சனைக்குரிய பகுதிகள் குறித்து சுரேஷ் ரெட்டிக்கு நல்ல அனுபவம் உள்ளது என்றார்.