பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூன், 2014

 புலிகள் என சந்தேகத்தில் இளைஞர்களை கைது செய்ய முடியுமாயின் பொதுபலசேனாவை ஏன் கைது செய்ய முடியாது 
news
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியுமாயின் அப்பட்டமாக வன்முறைகளில் ஈடுபடுகின்ற பொது பல சேனா, சிங்கள ராவய போன்ற தீவிரவாத இயக்கத்தினரை ஏன் அந்த சட்டத்தை பிரயோகித்து கைது செய்ய முடியாது?
 
இவ்வாறு கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அளுத்கம, தர்கா நகர, பேருவளை, பன்னல உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பேரினவாத தாக்குதல்களைக் கண்டித்து நேற்று கல்முனை மாநகர சபையில் கண்டனத் தீர்மானத்தை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
அவர் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது
 
கடந்த 15ஆம் திகதி அளுத்கம, தர்கா நகர் ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன ஒழிப்பு நடவடிக்கை 1983 ஆம் ஆண்டின் கறுப்பு ஜூலை போன்றதொரு கறைபடிந்த கறுப்பு ஜூனாக நோக்க வேண்டியுள்ளது.அந்தளவுக்கு தர்கா நகரில் இன வெறியாட்டம் நடந்தேறியுள்ளது.
 
தர்கா நகர் மீதான தாக்குதல்கள் நன்கு திட்டமிட்டே அரங்க்கேற்றப் பட்டிருக்கின்றன. முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற பிரதேசம் ஒன்றை ஊடறுத்து பேரணி சென்றது மாத்திரமல்லாமல் பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து பேரணி மீது கல்வீச்சு நடத்தும் அளவுக்கு அவர்களது திட்டமிடல் இருந்துள்ளது.
 
பள்ளிவாசல் அருகில் இருந்து பேரணி மீது கல் வீச்சு நடத்தினால் என்ன நடக்கும் என்ற பாரதூரத்தை அங்குள்ள முஸ்லிம்கள் அறியாதவர்களல்ல. ஆகையினால் முஸ்லிம்கள் அந்த வேலையை அங்கிருந்து செய்திருக்க அணுவளவும் வாய்ப்பில்லை என்பது சிறு பிள்ளைக்கு கூட தெரிந்த விடயமாகும்.
 
ஆனால் கூட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை முஸ்லிம் பிரதேசமொன்றினுள் பேரணி செல்வதற்கும் பயன்படுத்தியது மாத்திரமல்லாமல் முஸ்லிம்களை வம்புக்கிழுக்கும் கோஷங்களையும் மேற்கொண்டு பேரணி மீது தாமே கல்வீச்சையும் நடத்தி விட்டு கலவரத்திற்கு தூபமிட்டுள்ளனர். இறுதியில் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு முஸ்லிம்களை வீடுகளுக்குள் முடக்கப்பட்ட நிலையிலேயே அவர்களது வர்த்தக நிலையங்களும் வீடுகளும் சொத்துகளும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன.
 
இதற்கு பொதுபல சேனா மாத்திரமல்ல சிங்கள ராவய போன்ற பௌத்த தீவிரவாத இயக்கங்களும் முன்னிலை வகித்துள்ளன. இவர்களின் இன வெறித் தாக்குதல்கள் அளுத்கமஇ தர்கா நகர்இ பேருவளை போன்றவற்றுடன் நின்று விடவில்லை.
 
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியுமாயின் அப்பட்டமாக வன்முறைகளில் ஈடுபடுகின்ற பொது பல சேனா, சிங்கள ராவய போன்ற தீவிரவாத இயக்கத்தினரை ஏன் அந்த சட்டத்தை பிரயோகித்து கைது சேது சட்டத்தின் முன் நிறுத்த முடியாது என்று கேள்வி எழுப்பினார்.