பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூன், 2014


கிளிநொச்சியில் ஒரு ஏழையின் மரணம் .அந்த குடும்பத்துக்கு கனடா வாழ வைப்போம் உதவி 
இந்த மாதத்தின் நடுப்பகுதியில் கிளிநொச்சி செல்வா நகரில், ஒரு காலைப் பொழுதில் ஏழைத்தொழிலாளி தன் மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் பட்டினியின் பிடியில் இருந்து காத்துக் கொள்ள தன் கந்தல் வீட்டில் இருந்து புறப்பட்டு கனகபுரம் வீதிக்கு ஏறும் ஒரு சந்தியில் மயங்கி வீழ்ந்தார்.
அயலில் உள்ளவர்கள் தெருவில் வந்தவர்கள் அந்த மனிதனை தூக்கியபோது அவரின் உயிர் பிரிந்திருந்தது. அந்த ஏழை மனிதனின் மரணமும் மரண வீடும் அந்த கிராமத்தின் குறித்த சிலரின்  உதவிகளுடன் இடுகாடுபோய் முடிந்துபோயிற்று.
அந்த ஏழை மனிதனின் பெயர் வைத்திலிங்கம் விக்னேஸ்வரன். 55வயது மதிக்கத்தக்க அந்த மனிதரின் மனைவி புவனேஸ்வரி. விரல்விட்டு எண்ணுகின்றவர்கள் மட்டும் சுற்றியிருக்க தன் பிரிவு ஆற்றாமையைக்கூட அழ சக்தி அற்றவளாய் இருந்தாள்.
விக்னேஸ்வரன் புவனேஸ்வரி தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள், டிலக்சன் பிறப்பிலேயே சித்த சுவாதீனமற்றவனாய் ஆகியிருக்கிறான். அடுத்தவள் லாயினி, கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் படிக்கும் சிறுமி.
அந்தப்பாடசாலைக்கும் லாயினியின் வீட்டுக்கும் நெடுந்தூரம் நடந்தே அந்த ஏழைச் சிறுமியின் கால்கள் தேய்ந்துபோயிருக்கிறது.
மரண வீடு நடந்து இரண்டு வாரங்கள் கழித்து லாயினியை சந்திக்கநேர்ந்தபோது லாயினி இறந்துபோன தன் தந்தையின் பழைய கறள் பிடித்த சைக்கிளில் பாறுக்கு கீழாக கால்களை நுழைத்த கெந்தி கெந்தி சைக்கிளோட கற்றுக்கொண்டிருந்தாள்.
ஏழை தொழிலாளி விக்னேஸ்வரனின் மரண வீடு பலருக்கும் மனச்சாட்சி உள்ளவர்களுக்கும் இதயத்தை நெருடுவது. ஏனெனில் வடக்கின் வசந்தத்தை பற்றியும் மேதகு ஜனாதிபதியின்  அபிவிருத்தி பற்றி அடிவருடி புராணங்கள் பாடுகின்றவர்களுக்கும் சில இடங்களில் ஆட்களே நடமாடாத வீதிகளுக்கும் குச்சொழுங்கைளுக்கும் கொங்கிறீட் போடுகின்றவர்களுக்கும் கிளிநொச்சி செல்வாநகரின் விக்னேஸ்வரனின் மரணத்துக்கு முன்னாக அவரது மிகவும் ஏழ்மையின் அடையாளத்தை காட்டும் கந்தல் வீடு.
அந்த வீட்டுக்கு தண்ணீர் இல்லை.மலசல கூடம் இல்லை. வேலி இல்லை. அவர்கள் அன்றாடம் சாப்பிடுகின்றார்களா, இல்லையா என்ற சேதி யாருக்கும் தெரியவில்லையே என்பதுதான்.
ஒன்றுக்கு பல வீடுகள், காணிகள், சொத்துச் சேர்ப்புக்கள். வாய்கிழிய அரசியல் பேச்சு. தேர்தல் காலங்களில் மட்டும் ஏழைகளின் படலைகளை திறந்து வாக்குப்பிச்சை எடுக்கும் இந்தச் சமுகத்தின் புல்லுருவிகள் என்று நிறம்மாறி நிறைந்து வழியும் இந்தச்சமுகத்தில் ஒரேஒரு வீடு அதற்கு ஒரு சிறுகிணறு.
ஒரு தற்காலிக மலசல கூட வசதியேனும் பிள்ளைகளுக்கு போசாக்கான உணவு, வீட்டுக்கு வேலி என்று எதுவுமே இல்லாமல் ஏன் முகவரியே இல்லாமல் பல குடும்பங்கள் சீரழிகின்றன என்பதற்கு கிளிநொச்சி செல்வாநகரின் வைத்திலிங்கம் விக்னேஸ்வரன் என்ற ஏழைத் தொழிலாளியின் மரணமும் அவர்களின் குடும்பத்தின் ஏழ்மையும் அந்த மரண வீட்டுக்காட்சியும் சாட்சி.
இந்த குடும்பத்துக்காக அயலுள்ள மற்றைய ஏழைகள் மிகுந்த கவலைப்படுகின்றார்கள். ஆனால் அவர்களிடம் கொடுக்கின்ற மனம் மட்டுமே உண்டு கொடுப்பதற்கு ஏதுமில்லை.
இந்த ஏழைக் குடும்பத்தில் தமிழ்மதி என்ற அழகான பெயருடன் கடைசிச்சிறுமி இருக்கிறாள். அவள் முதலாம் ஆண்டு படிக்கின்றாள். லாயினி ஆறாம் ஆண்டு படிக்கின்றாள். டிலக்சன் சித்தசுவாதீனமுற்றவன். அம்மா எலும்பும் தோலுமான தாய் புவனேஸ்வரியால் என்ன செய்யமுடியும்.
தன் கணவன் தங்களுக்கு சாப்பாட்டுக்கு குறைவைக்கவில்லை என்று புவனேஸ்வரி சொல்கிறாள். உண்மைதான். ஏழைகளின் சாப்பாடு மூன்று வேளையா? இரண்டு வேளையா? ஒரு வேளையா?
கிளிநொச்சி செல்வாநகரில் தன் கணவனை இழந்து மூன்று பிள்ளைகளுடன் நிர்க்கதியாகி நிற்கும் புவனேஸ்வரிக்கு கனடா வாழவைப்போம் அமைப்பு பா.உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக ஒரு தொகுதி பண உதவியை வழங்கியிருக்கின்றது.
அதை பா.உறுப்பினர் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் பாலாசிங்கசேதுபதி தனது செயலாளரும் கட்சியின் மாவட்டத்தின் உப தலைவருமான பொன்.காந்தன் ஆகியோருடன் சென்று கையளித்துள்ளார்.
அத்தோடு இக்குடும்பத்தின் பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் சிறக்க கருணை உள்ளம் படைத்தவர்கள் உதவ வேண்டுமென அவர் கோரிக்கையும் விடுத்துள்ளார்.
செல்வாநகரின் இதயம் வலிக்கும் சேதிகள் இன்னும்........
செல்வாநகர் பிரதான வீதியில் இறங்கி குறுகிய தூரத்தில் மரணித்துப்போன வைத்திலிங்கம் விக்னேஸ்வரன் என்ற ஏழைத் தொழிலாளியின் வீட்டின் அயலில் கிட்டத்தட்ட இந்தக்குடும்பத்தின் நிலையை ஒட்டியே இன்னும் ஏழெட்டுக் குடும்பங்களின் நிலையும் விரிகின்றது.
இவர்களை பா.உறுப்பினர் சி.சிறீதரன் சந்தித்தபோது அவர்கள் கூறிய கதைகள் அதிர்ச்சி தருகின்றவைதான்.
இன்னமும் இவர்களுக்கு வீட்டுவசதிகள், வீட்டுத்திட்டங்கள் எதுவுமில்லை. மலசலகூட வசதியில்லை. கிட்டத்தட்ட இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் வாழந்து வருதாகவும் தமது வாழ்கையில் எந்த விடியலும் இல்லை என்கிறார்கள்.
வீதியில் உள்ள ஒரு குழாய்க்கிணறுதான் ஒரு அட்சய பாத்திரமாக ஏதோ கொஞ்ச தண்ணீர் கொடுக்கின்றது. குளிப்பதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.
தண்ணீர் பிரச்சினை செல்வாநகரில் உள்ள குடும்பங்களையும் வாட்டாமல் இல்லை. இந்த வாழ்;க்கையும் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் காணி வீட்டுவசதிகள் பொதுவசதிகளை திட்டமிடுகின்றவர்களின் அசமந்த போக்கு பாரபட்சம் மனச்சாட்சி இன்மை என்பவற்றால் சீரழிந்து போகின்றது.