பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜூன், 2014


தேர்தலில் தோற்கவில்லை: மின்னணு வாக்கு இயந்திரங்களில் பல கோல்மால்கள் நடந்திருக்கிறது: மு.க.ஸ்டாலின்
 

திமுக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.தென்னவன் இல்லத் திருமணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின் 
இந்த மணவிழாவில் கலந்து கொண்டு திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைக்கும் பொறுப்பை பெற்று தந்தமைக்கு தென்னவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெறும் சம்பிரதாய அடிப்படையில் நான் இந்த நன்றியை தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே நான், இங்கு வரவேற்புரையாற்றிய பெரியகருப்பன் எடுத்துரைத்தது போல தென்னவன் அவர்களின் இரண்டு மகள்களுக்கும், நான் தான் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறேன் என்று கூறிக் கொள்வதில் பெருமையடைகிறேன். இந்த திருமணத்தையும் நானே நடத்தி வைக்கும் பெருமை எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது.
இங்கு பேசியவர் குறிப்பிட்டதுபோல் தென்னவன் அவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் தான் என்று அவர் வருத்தப்படாமல் இருக்க பேரப்பிள்ளைகள் இருப்பதாகவும் அந்த பேரப்பிள்ளைகளுக்கும் நானே திருமணத்தை நடத்தி வைப்பேன் எனவும், கூறினார்கள்.
பேரக்குழந்தைகளின் திருமணத்தை மட்டுமல்ல, அவர்களின் கொள்ளு, பேரன் பேத்திகளின் திருமணத்தையும் நானே நடத்தி வைப்பேன். இதை நான் என்னுடைய வாழ்நாட்களை பொறுத்து பெருமை கொள்ள கூறவில்லை. தென்னவனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பை குறித்து கூறுகிறேன். உங்களோடு சேர்ந்து நானும், மணமக்களை வாழ்த்துவதில், பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சியடைகிறேன்.
நான் ஒவ்வொரு சீர்திருத்த திருமணத்திலும், சுயமரியாதை உணர்வுடன் நடக்கும் திருமணத்திலும், குறிப்பிடும் ஒரு செய்தி, இது போன்ற சீர்திருத்தத் திருமணங்கள் 1967க்கு முன்பே நடைபெறும் என்று சொன்னால் அந்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் அங்கீகாரத்தை நாம் அன்றைக்கு பெற்றிருக்கவில்லை. 1967-ம் ஆண்டு நம்முடைய அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்று, திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி முதன் முதலில் தமிழ்நாட்டில் உருவான நேரத்தில் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்று முதன் முதலாக சட்டமன்றத்திற்குள்ளே முதலமைச்சராக நுழைந்து முதல் தீர்மானமாக அண்ணா அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் எந்த தீர்மானம் என்று கேட்டால் “சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லும்” என்றதீர்மானம்தான். 
அந்த அங்கீகாரத்தை அண்ணா அன்றைக்கு பெற்றுத் தந்தார். ஆகவே இன்றைக்கு நடைபெற்றிருக்கின்ற இந்த சீர்திருத்த திருமணம் சட்டப்படி, முறைப்படி செல்லுபடி ஆகுமென்ற அங்கீகாரத்தோடு நடந்து முடிந்திருக்கிறது. ஆகவே இது சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணம். சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணம் மட்டுமல்ல இது நம்முடைய தமிழ் திருமணம். நம்முடைய தாய்மொழியாக இருக்கக்கூடிய நம்முடைய அழகு தமிழ்மொழியில் நடைபெறக்கூடிய திருமணம். இன்னும்கூட பெருமையோடு சொல்ல வேண்டுமென்று சொன்னால் நம்முடைய தாய்மொழிக்கு தலைவர் கலைஞர் அவர்கள், செம்மொழி என்கிற அங்கீகாரத்தையும் பெற்று தந்திருக்கிறாரே! அந்த தமிழ் மொழியில் நடைபெற்ற திருமணம்,  ஆனால் அதுவே இந்த திருமணம் வைதீக முறையில் நடைபெற்றிருந்தால், நடைபெறாது தென்னவன் அதை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார். ஒரு வாதத்திற்காக எடுத்து கொள்வோம். அப்படி  வைதீக முறையில் நடைபெற்றிருந்தால்  சென்னையில் இருந்து நானும் வந்திருக்க மாட்டேன். இங்கு வந்திருக்கும் நமது கழக முன்னோடிகளும், பல்வேறு மாவட்டச் செயலாளர்களும், கழக முன்னணியினரும், வந்திருக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல இப்படி மணமக்களை, வசதியாக மேஜையில் அமர்த்தியிருக்க மாட்டார்கள். கீழே ஒரு பலகையைப் போட்டு, அவர்களை கஷ்டப்படுத்தி உட்கார வைத்து, புரோகிதர்  அங்கே நெருப்பை மூட்டி, புகையை கிழப்பி மணமக்கள் கண்களிலிருந்து கண்ணீரை வரவைத்து, மேலும் அங்கு இருப்பவர்கள் அனைவரையும், கண்ணீரில் மூழ்கடித்து, ஒரு சோக நிலையில் தான் இந்த திருமணம் நடந்திருக்கும். அது மட்டுமல்ல பின்பு அந்த புரோகிதர் முப்பத்து முக்கோடி தேவர்களையும் கூப்பிட்டு, அவதாரங்களை கூப்பிட்டு, சில எக்ஸ்ட்ரா அவதாரங்களையும் கூப்பிட்டு, இந்த திருமணத்தை புரியாத ஒரு மொழியில் நடத்தி வைத்திருப்பார்.
ஆனால் இங்கு நடந்திருக்கும் இந்த திருமணம் அப்படியல்ல, வந்திருப்பவர்கள் அனைவரும் வாழ்த்தியது உங்களுக்கு புரியும், நாங்களும் உணர்வோடு தான் வாழ்த்துகிறோம். அதுமட்டுமல்ல மணமக்களை வாழ்த்துகிறபோது, அவர்களின் பெற்றோர்களின் சிறப்பை பற்றியும், நாட்டு நடப்புகளை பற்றி எடுத்துக்கூறி நம் தாய் மொழியான அழகு தமிழ் மொழியில் உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துவதில் இன்னும் பெருமைப்படுகிறேன்.
இங்கே தென்னவனைப் பற்றி சிலர் குறிப்பிட்டு பேசியது போல அவர் 19 ஆண்டுகளுக்கு முன் அ.தி.மு.க.வில் அமைச்சராக பணியாற்றி கட்சியிலும் அந்த கட்சியிலும் உயர்மட்ட அளவில் இருந்து பணியாற்றியிருக்கிறார். பின்பு அந்த கொள்கையில் உடன்பாடு ஏற்படாமல், நமது தலைவர் கலைஞர் தலைமையில் பணியாற்ற அவரை இணைத்துக் கொண்ட அந்த நேரத்திலும், புதுக்கோட்டை விஜயா அவர்கள் சொன்னது போல, இந்த கட்சிக்கு சென்றால் நமக்கு என்ன கிடைக்கும் என்று கணக்குப் பார்த்துக் கொண்டு வராமல் தான் கொண்ட கொள்கையிலும்,கழகத்தின் பால் அன்பையும், தன்னுடைய உழைப்பையும் காட்டி பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி உரையாற்றிய போது, அவரும், தென்னவனும் இணைந்து பணியாற்றியதாக கூறினார். அவர் இணைந்து அல்ல கட்சிக்குள் பிணைந்து பணியாற்றியிருக்கிறார். தென்னவன் பொதுக் கூட்டத்தில் பேசினாலும் சரி, கழகத்தின் எந்த நிகழ்ச்சியில் உரையாற்றினாலும் சரி, அவருடைய பேச்சில் இலக்கியம் கலந்து இருக்கும். அப்படி இலக்கிய உணர்வோடு இருப்பதால் தான் அவர் இலக்கிய அணியின் செயலாளராக இருக்கிறார்.  ஒரு முறை அண்ணா அறிவாலயத்தில் தலைவர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்த ஒருவர்  ஒரு மாவட்டத்தின் இலக்கிய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துப் பெற வந்திருப்பதாக கூறினா. அப்பொழுது தலைவர் கலைஞர் அவர்கள் அவரைப் பார்த்து ஒரு கேள்வி எழுப்பினார். உனக்கு இலக்கியங்களைப் பற்றி தெரியுமா? என்று கேட்டார். அவரும் தெரியும் என்று பதிலளித்தார். அப்படி என்றால் நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்கு பதிலளியுங்கள் என்றார் தலைவர். கம்பராமாயணத்தை இயற்றியவர் யார்? என்று கேள்வி கேட்டார். அதற்கு அவர் கூறிய பதில் என்ன தெரியுமா நீங்கள் தான் தலைவரே என்றார்.
நான் கேட்ட கேள்வியிலேயே பதிலிருக்கிறதே ஐயா. கம்பர் தான் கம்பராமாயணத்தை இயற்றினார் என்றார். ஆக, அப்படி இருப்பவர்கள் மத்தியில் இலக்கிய உணர்வோடு இருக்கும் நம் தென்னவன் அவர்களின் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்தியதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அதேபோல் இங்கு பேசியவர்கள் முடிந்த நாடாளுமன்ற தேர்தலைப் பற்றிப் பேசினார்கள். நான் என்ன கூற விரும்புகிறேன் என்றால், நடந்து முடிந்த தேர்தல், மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான தேர்தல். ஆனால் 2016-ல் வரவிருக்கும் தேர்தல் மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான தேர்தல் எனவே இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பான ஒன்று. நமது கழகத்தைப் போன்று எவரும் வெற்றியை கண்டவரும் இல்லை. தோல்வியை கண்டவரும் இல்லை. அதற்கு தான் அண்ணா அன்றே கூறினார் தி.மு.க.வினர் வெற்றியை கண்டு வெறிகொண்டு அலைபவரும் அல்ல. தோல்வியை கண்டு துவளுபவரும் அல்ல என்று கூறினார்.
எனவே நடந்து முடிந்த தேர்தலில் நாம் தோற்கவில்லை தமிழ் மக்கள் தான் தோற்றிருக்கிறார்கள். அதிலும் இந்த தேர்தலில் என்னென்ன சூட்சுமங்கள் நடந்திருக்கிறது என்று இரண்டு நாட்களுக்கு முன்பு எக்னாமிக் டைம்ஸ் என்ற டெல்லியிலிருந்து வெளிவரும் பத்திரிகையில் 28.6.2014 அன்று தலைப்பு செய்திகளாக குறிப்பிட்டிருக்கிறார்கள், மின்னணு வாக்கு இயந்திரங்களில் பல கோல்மால்கள் நடந்திருக்கிறது. அதற்கு ஆதாரமாக அசாமில் நடந்திருக்கும் தேர்தலில் குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் எந்த பட்டனை அழுத்தினாலும், பி.ஜே.பி.க்குதான் ஓட்டுக்கள் சென்றிருக்கிறதாம். அதே போல புனேயிலும் இது போன்று ஒரே கட்சிக்கு ஓட்டுக்கள் சென்றிருப்பதாக ஆதாரத்தோடு வெளியிட்டிருக்கிறார்கள் அந்த நாளேடு.
எது எப்படி நடந்தாலும், வரவிருக்கும் தேர்தலில் நம் கழகத்தை வெற்றி பாதையில் அழைத்துச் செல்ல உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, இந்த மணவிழாவில் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இங்கிருக்கும் மணமக்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் வீட்டுக்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டராய் சிறப்பாக எல்லா நலனும் வளமும் பெற்று வாழ வாழ்த்தி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.