பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூலை, 2014


பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உட்பட 7 பேர் விடுதலை! தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் சாந்தன், முருகன், நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த காங்கிரஸ் அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று மாலை விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார்.

குற்றவாளிகள் தண்டனை குறைப்பு, விடுதலை என இரு பலன்களை பெறும் நிலை கூடாது என்றும், பாதிக்கப்பட்டவர்களின் கருத்தை கேட்க வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

குற்றவாளிகளை விடுவிக்கும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளதாகவும் வழக்கறிஞர் தனது வாதத்தின்போது எடுத்துரைத்தார்.

இதையடுத்து, மத்திய அரசின் மனு மீது அனைத்து மாநில அரசுகளும் எதிர்வரும் 18ம் திகதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அதுவரை ஆயுள் தண்டனை கைதிகளை எந்த மாநில அரசுகளும் விடுதலை செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் குற்றவாளிகளை விடுவிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு கிடையாது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு மத்திய அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த  மனு மீதான விசாரணையை எதிர்வரும் 22ம் திகதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.