பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூலை, 2014


நீங்கள் பேச்சுக்கு மத்தியஸ்தம்வகித்தால் நாங்கள் தயார்  -தென்னாபிரிக்க பிரதிநிதி ரமபோசாவிடம் இரா.சம்பந்தன் தெரிவிப்பு

தென்னாபிரிக்கப் பிரதிநிதிகளுடனான இன்றைய சந்திப்பு ஆக்கபூர்வமானதாக அமைந்தது.  இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தென்னாபிரிக்கக் குழுவினர் மத்தியஸ்தம் வழங்கினால் நாம் அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பா.. உ. தெரிவித்தார்
இன்றைய சந்திப்பு தொர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவர்கள் தமது நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வந்தனர் என்பது குறித்து எமக்கு விளக்கினர்.
இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வை எட்டுவதற்கு தாம் முழு ஆதரவை வழங்குவோம் என்றும் தென்னாபிரிக்க குழுவினர் உறுதியளித்தனர்.
தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிறில் ரமபோஷா தலைமையிலான குழுவினர் இன்று காலை 7.15 மணி தொடக்கம் 8.45 மணி வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்புக் குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
ஏற்கனவே தென்னாபிரிக்காவில் நாம் தீர்வு முயற்சிகள் குறித்து சந்திப்புக்களை நடத்தியிருந்தோம். இதன் தொடர்ச்சியாகவே இன்றைய சந்திப்பும் அமைந்தது.
இந்தப் பேச்சும் எமக்குத் திருப்திகரமாக அமைந்தது. அவர்கள் தமது நாட்டுப் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பது குறித்து விளக்கினர்.
இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தென்னாபிரிக்கக் குழுவினர் மத்தியஸ்தம் வழங்கினால் நாம் அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம்.
இங்கு பல தரப்பட்ட தரப்பினர் இருக்கின்றனர் அவர்களுடனும் விரிவாகப் பேசி ஓர் இணக்கத்திற்கு வருவதே முக்கியமானது - என்றார்.
இன்றைய சந்திப்பில் தென்னாபிரிக்க குழு சார்பில் அந்நாட்டு உதவி ஜனாதிபதி சிறில் ரமபோசா, உதவி வெளிவிவகார அமைச்சர் இப்ராகிப் இஸ்மாயில் இப்ராகிம், தற்போது ரமபோசாவின் சிரேஸ்ட ஆலோசகர் றூத் மேயர், ஐவர் ஜெனின், இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தென்னாபிரிக்க கறுப்பினப் பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மை வெள்ளையருக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முக்கிய பங்காற்றியவர்களாக ரமபோசாவும் றூத் மேயரும் விளங்குகின்றனர்.
கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிரதிநிதியாக இப்போதைய உப ஜனாதிபதி சிறில் ரமபோசாவும் வெள்ளையர்களின் பிரதமரான டி கிளார்க்கின் பிரதிநிதியாக றூத் மேயரும் செயற்பட்டனர்.
இவர்கள் இருவரின் மூலமே அந்த நாட்டுப் பிரச்சினை தீர்க்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு தரப்பிலுமாக முக்கியத்துவம் வகித்த பிரதிநிதிகள் இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்கு வந்திருப்பது முக்கியமானது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கூட்டமைப்பு பிரதிநிதிகள் சார்பாக சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டனர்.