பக்கங்கள்

பக்கங்கள்

3 ஆக., 2014


அமைச்சர்களான ஹக்கீமும், விமலும் அணிமாறத் திட்டம்?: கடுப்பில் ஜனாதிபதி மஹிந்த
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரின் ஆளுங்கட்சியிலிருந்து அணிமாறும் முடிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்வரும் ஊவா மாகாணசபைத் தேர்தலின் பின் ஆளுங்கட்சியிலிருந்து விலகி, எதிர்க்கட்சியுடன் இணைந்து செயலாற்றுவது தொடர்பில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இரகசிய செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பான இரகசிய தகவல்கள் உளவுத்துறை மூலம் ஜனாதிபதிக்கு கிட்டியுள்ளதாக வார இறுதி சிங்களப் பத்திரிகைகளான லக்பிம, திவயின போன்றவை முக்கிய செய்திகளாக வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் தமது அணிமாறல் தொடர்பில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இரகசியமாக சந்தித்துக் கலந்துரையாடிய விடயம் ஜனாதிபதியை கடுப்பேற்றியுள்ளது.
இதனையடுத்து இரண்டு அமைச்சர்களுக்கும் எதிரான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களிடமும், ஜனாதிபதி ஊடகப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் இரண்டு அமைச்சர்களையும் அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து ஜனாதிபதி காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் இதுபோன்றதொரு நாடகமொன்றை அமைச்சர் விமல் வீரவன்ச அரங்கேற்றியிருந்தார். அப்போது அவருடைய கட்சியுடன் ஐ.தே.க. சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த மையோன் முஸ்தபா எம்.பி.யை லஞ்சக் குற்றச்சாட்டிலும் சிக்க வைத்திருந்தார்.
இதன் காரணமாக இம்முறை அமைச்சர் விமலின் விடயத்தில் ஐ.தே.க. வெகு எச்சரிக்கையுடன் அணுகும் முடிவில் இருப்பதாக சிறிகொத்தா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.