பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2014

இயற்கை வளம் கொள்ளை! சகாயம் நியமனத்தை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு! மார்க்சிஸ்ட் கண்டனம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் கிரானைட் உட்பட கனிம குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கையளித்திட ஐ.ஏ.எஸ். அதிகாரி உ. சகாயத்தை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 

தமிழகத்தில் கிரானைட், மணல், தாதுமணல் தொடர்ந்து கொள்ளை போவதைத் தடுத்து நிறுத்திட தமிழக அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்கனவே கிரானைட் கொள்ளையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கம் நடத்தியதோடு சி.பி.ஐ. விசாரணை கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. 

இப்பின்னணியில் மேற்கண்ட இயற்கை வளங்கள் கொள்ளை போவது குறித்து ஆய்வு செய்திட சென்னை உயர்நீதிமன்றம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்தது. ஐ.ஏ.எஸ். அதிகாரி மேற்கொள்ளும் ஆய்விற்கு மாநில காவல்துறையும், அரசு நிர்வாகமும் உதவி செய்ய வேண்டுமென்றும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. 

ஏற்கனவே அரசு அனுமதியின்றி கிரானைட் வெட்டியெடுத்து ஏற்றுமதி செய்ததால் பல்லாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் (மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போது) அரசுக்கு அறிக்கை அனுப்பியிருந்தார். அதற்கு பிறகுதான் கிரானைட் கொள்ளை அம்பலமானது. 

இயற்கை வளம் கொள்ளை போவதை தடுத்திட உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

நீதிமன்ற உத்தரவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்கு பதிலாக அதை ஆட்சேபித்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு மேல்முறையீடு செய்யும் முடிவை மாநில அரசு கைவிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.