பக்கங்கள்

பக்கங்கள்

13 செப்., 2014

மகாராஷ்ட்ரா சட்டசபை தேர்தலில் போட்டியிட அதிக 'சீட்'  கேட்டால் கூட்டணி முறியும் என்று பா.ஜனதாவுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வருகிற அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று மகாராஷ்ட்ரா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்றுதான் வெளியிட்டது.

இதனையடுத்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தைகளை அம்மாநில அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் நீண்ட காலம் கூட்டணி கட்சிகளாக விளங்கும் சிவசேனாவுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே முதல்வர் பதவி மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் மோதல் நிலவுகிறது. கூட்டணி வெற்றிபெற்றால் முதல்வர் பதவி தங்களுக்குத்தான் என்பதில் சிவசேனா பிடிவாதமாக உள்ளது.

மொத்தமுள்ள 288 சட்டசபை தொகுதிகளில் தங்களுக்கு இந்த முறை கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது. அத்துடன் சிவசேனா தனக்கான தொகுதிகளில், மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்றும் பா.ஜனதா கோருகிறது.

அண்மையில் நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு கிடைத்த வெற்றியை முன்வைத்து பா.ஜனதா இந்த கோரிக்கையை முன்வைப்பதாக தெரிகிறது. இத்தேர்தலில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பா.ஜனதா 23, சிவசேனா 18 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.