பக்கங்கள்

பக்கங்கள்

20 நவ., 2014

கூரிய ஆயுதங்கள் சகிதம் துணிகர கொள்ளை 24 இலட்சம் ரூபா பணமும் 12.75 பவுண் நகைகளும் திருட்டுக் கும்பல் வசம்
முகமூடி அணிந்த கொள்ளை யர்கள் கூரிய ஆயுதங்கள் சகிதம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எனக்கூறி வீட்டின் பின்புறத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை கட்டி வைத்து விட்டு பின் கதவை உடைத்து உள்நுழைந்து அறையில் அலுமாரியினுள் வைக்கப்பட்டிருந்த 24 இலட்சம் ரூபா பணத்தினையும் 12.75 பவுண் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று அதிகாலை 1.45 மணியளவில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கருவேலன்கண்டல் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது, முகமூடி அணிந்த நான்கு கொள்ளையர்கள் கத்தி,கோடரி,வாள்கள் போன்ற கூரிய ஆயுதங்களுடன் வீட்டின் பின்புறமாக படுத்திருந்த கட்டட வேலைகளில் ஈடுபடும் நான்கு நபர்களை அவர்களது போர்வை கொண்டு கைகள் கால்கள் ஆகியவற்றை கட்டிய பின்னர் சத்தம் போடக் கூடாது நாம் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வந்துள்ளோம் எனக்கூறி மிரட்டியதுடன் அவர்களிட மிருந்த கையடக்க தொலைபேசிகளையும் பறித்து எடுத்துள்ளனர்.

அதன் பின்னர் வீட்டின் பின்புற கதவை உடைக்கும் சத்தம் கேட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த வீட்டு உரிமையாளரும் மனைவியும் விழித்துக் கொண்டனர்.

உடனடியாக அவர்கள் இருவரும் எழுந்து கதவினை தள்ளிப் பிடித்த வேளை மனைவி அலவா ங்கினால் குத்துப்பட்டு மயங்கி வீழ்ந்தார்.

அதனையடுத்து கதவினை உடைத்து உள்நுழைந்த திருட்டுக் கும்பலுக்கும் உரிமையாளருக்கும் இடையில் சுமார் 30 நிமிடங்கள் வரை வாய்த்தர்க்கம் தொடர்ந்தது.

இதனையடுத்து வீட்டு உரிமையாளர் கையிலும் தலையிலும் வாள் வெட்டுக்கு இலக்காகி மயங்கி வீழ்ந்தார்.

ஒப்பந்தகாரரினால் வங்கியில் எடுத்துவரப்பட்டு அலுமாரியில்  வைக்கப்பட்டிருந்த 24இலட்சம் ரூபா பணத்தினையும் 12.75பவுண் நகைகளையும் தம்வசம் எடுத்துக் கொண்ட கும்பல் வீட்டின் பின்புறம் வழியாக தப்பிச்சென்றுள்ளனர்.

சில மணிநேரம் சென்ற நிலையில் மனைவி மயக்கம் தெளிந்து அவலக்குரல் எழுப்பவே அயலவர்கள் அவ்விடத்திற்கு ஓடிவந்து காயப்பட்ட இருவரையும் மீட்டு முள்ளியவளை மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்த்தனர்.

இச் சம்பவத்தில் ஒப்பந்தகாரரான இலட்சுமிகாந்தன் சந்திரரூபன் (வயது-51) என்பவரே படுகாயமடைந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் அன்றையதினம் காலை மோப்ப நாய்களுடன் குறித்த வீட்டிற்கு வருகை தந்து கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் துரித விசாரணையினையும் மேற்கொண்டனர்.