பக்கங்கள்

பக்கங்கள்

23 நவ., 2014

ரணில், மைத்திரிபால, சோபித தேரர் பேச்சுவார்த்தை!: ஜே.வி.பி.யும் பங்கேற்பு?- பொது கூட்டணியில் ஜே.வி.பி இணையாது
எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்று மாலை சோபித தேரரை சந்தித்து உரையாடவுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நீதியான சமூகமொன்றுக்கான தேசிய அமைப்பின் ஆதரவை பெற்று கொள்வது தொடர்பில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக எதிர் கட்சி தலைவரின் அலுவலக வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
மாதுளுவாவே சோபித தேரரின் விகாரையான கோட்டே நாகவிகாரையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
தற்போதைய நிலையில் மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ள வாக்குறுதிகள் பாராட்டத்தக்கவை என்றும், தனது ஆதரவு தொடர்பான நிலைப்பாட்டை கலந்தாலோசனையின் பின்னர் பகிரங்கப்படுத்துவதாகவும் மாதுளுவாவே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜே.வி.பி.யினரின் ஆதரவை பெற்று கொள்வது தொடர்பிலும் ரணில் விக்கிரமசிங்க தரப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
எனினும் தமது கட்சியின் உயர்மட்ட குழுவில் கலந்தாலோசிக்காமல் எந்தவொரு முடிவையும் தெரிவிக்க முடியாது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
வேட்புமனுத்தாக்கலுக்கு ஒரு நாள் முன்னதாக தமது முடிவு அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டணியில் ஜே.வி.பி இணையாது
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனித்து செயற்பட ஜே.வி.பி தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் பொது கூட்டணியில் இணையாது செயற்பட தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பியின் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க தொடர்ந்தும் போராட போவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.