பக்கங்கள்

பக்கங்கள்

20 நவ., 2014

உயிரிழந்தவர்களை நினைவுகூரமுடியாத அடக்கு முறைக்குள் தமிழரின் வாழ்க்கை யாழ்.மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டு

இறந்தவர்களை நினைவுகூர முடியாத அடக்கு முறைக்குள் தமிழர்கள் இருப்பதனால் அவர்களின் ஆரோக்கியமும் உள நிலையும் பாதிப்படைகின்றது என யாழ். மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் யாழ்.மருத்துவர் சங்கம் தெரிவிக்கையில், பல் தேசிய  கம்பனிகளின் கொள்ளை இலாபம் ஈட்டும் சுயநலன் காரணமாக அவற்றின் நலன் காக்கும்  வல்லரசுகள், உலக ஸ்தாபனம் போன்றவற்றின் அழுத்தம் காரணமாக  மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இலங்கையில் மிகவும் அதிக விலையில் விற்கப்படுகின்றன.

இதன் காரணமாக பல ஏழை நோயாளிகளுக்கு உரிய மருந்துகளையும் சிகிச்சைகளையும் பெற முடியாத அவல நிலையேற்பட்டுள்ளது.

இதனை முதுகெலும்பில்லாத அரசியல் தலைமைகள் தட்டிக் கேட்க திராணியற்று இருக்கும் போது ஊடகவியலாளர்கள் இந்த சுரண்டல்களை அம்பலப்படுத்தி உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்து மனித அடிப்படை உரிமைகளில் ஒன்றான சுகாதார வசதி அனைவருக்கும் கிடைப்பதற்குரிய வழி வகையைச் செய்தல் வேண்டும்.

தற்போதைய காலகட்டத்தில் போரின் விளைவுகளினால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களை ஆரோக்கியமான பாதைக்கு இட்டுச் செல்வதற்கு அனைவரினதும் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் சுகாதாரச் சேவை அபிவிருத்தியானது கடந்த 3 தசாப்தகாலமாக திட்ட மிட்டவகையில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றதா என ஆராயப்படல் வேண்டும்.

யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டதாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வரு
கின்றது.

இந்நிலையில் வடகிழக்கில் வாழ்வாதாரம் இன்றியும் கணவனையிழந்த நிலையிலும் பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான விதவைகள், கணவன் இறந்து விட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதனை  அறிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் பெண்கள் மற்றும் இறந்தவர்களை நினைவு கூர முடியாமல்  அடக்குமுறைக் குள்ளாக்கப்பட்டு இருக்கும் தமிழ் மக்களின் உண்மையான உளவியல் மற்றும் வாழ்வதாரப் பிரச்சினைகள் வெளிக் கொணரப்படல் வேண்டும்.

இவ்வாறே பெருந்தோட்டப் பகுதியில் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து  தகுதி வாய்ந்த மருத்துவர்களை நியமிக்காது சுகாதார சேவையில் காட்டப்படும் பாரபட்சம் திட்ட மிட்ட கருவன அழிப்பு ஆகியவற்றினையும் ஆதாரங்களுடன் வெளிக் கொணர வேண்டும்.

அண்மைக்காலத்தில் தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்டப்பட்ட முறையில் மேற்கொள்ளப் பட்டுவரும் கருவனக்குறைப்பு நடவடிக்கைகள், அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற  கண்துடைப்பு விசாரணைகள் போன்ற  இனஅழிப்பு நடவடிக்கைகளை மனிதவுரிமை மீறல்களையும் அம்பலப்படுத்த வேண்டும்.

தமிழ்  பேசும் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளில் பெரும்பாலானோர் மக்களின் சுகாதாரத் தேவை போன்ற அடிப்படை நலன்களில் ஆர்வமின்றி தமது ஆசனங்களை உறுதிப்படுத்துவதில் ஆர்வமாகவுள்ளனர்.

தமிழர்களின் இருப்பு கேள்விக் குறியாகிவிட்ட நிலையில் மக்களை வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு ஊடகங்களுக்கே உண்டு என யாழ். மருத்துவ சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.