பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2014



ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கட்சிதாவல் ஆரம்பம்! வசந்த சேனநாயக்க ஐ.தே.க.வில் இணைந்தார் - வெளியேற தயாராகும் அமைச்சர்கள்

ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தா நோக்கி விரைந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைக்கு அவர் ஸ்ரீகொத்தாவை அண்மித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களைத் தொடர்பு கொண்டபோது தெரியவந்துள்ளது. எனினும் வசந்த சேனநாயக்கவின் மொபைல் தொலைபேசி தற்போது அணைத்து வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீகொத்தா சென்றடைந்த பின்னர் அதுகுறித்து ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டு செய்தியாளர்களை சந்திக்கவும் வசந்த சேனநாயக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே வசந்த சேனநாயக்க ஸ்ரீகொத்தாவை சென்றடையும் முன்னர் அவரைத் தடுத்து அழைத்து வர ஆளுங்கட்சியின் இரண்டு முக்கிய அமைச்சர்கள் பாதுகாப்பு புடைசூழ பிட்டகோட்டே பிரதேசத்தில் நிலைகொண்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள அனைத்துப் பாதைகளிலும் வசந்த சேனநாயக்கவின் வருகையைக் கண்காணிப்பதற்கென புலனாய்வாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
எக்காரணம் கொண்டும் வசந்த சேனநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய விடக் கூடாது என்பதில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உறுதியுடன் இருப்பதாகவும் குறித்த தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.