பக்கங்கள்

பக்கங்கள்

17 டிச., 2014

அபார வெற்றியுடன் விடைபெற்றனர் சங்கா, மஹேல 
இங்கிலாந்துக்கு எதிராக ஏழாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 48 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
 
இதன் மூலம் 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 5 - 2 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
 
இரு அணிகளுக்குமிடையிலான இறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
 
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்களைப்  பெற்றது.
 
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அசத்திய திலகரட்ன டில்ஷான் 101 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் வந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஸ் சந்திமால் 55 ஓட்டங்களையும் திசர பெரேரா 54 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் இங்கிலாந்து சார்பில் ஜோர்தான் மற்றும் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.
 
303 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே தடுமாறியதை காண முடிந்தது.
 
இங்கிலாந்து அணி சார்பில் ரூட் மாத்திரமே சிறப்பாக ஆடி 80 ஓட்டங்களைப் பெற்றார். ஏனையவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.
 
இறுதியில் இங்கிலாந்து அணி 45.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 215 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 87 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
 
இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் நேற்றைய தினம் தமது சொந்த மண்ணில் இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
எனினும் அவர்களால் எதிர்பார்த்த அளவு ஓட்டங்களை குவிக்க முடியவில்லை. சங்கக்கார 33 ஓட்டங்களையும் மஹேல 28 ஓட்டங்களையும பெற்றனர்.
 
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தின் போது இறுதியில் பந்துவீச அழைக்கப்பட்ட மஹேல ஜயவர்த்தன 1.5 ஓவர்கள் பந்து வீசி ஒரு  விக்கெட்டினை வீழ்த்தியமை இரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
 
போட்டியின் ஆட்ட நாயகன் மற்றும் தொடராட்ட நாயகன் விருதை திலகரட்ன டில்ஷான் பெற்றுக் கொண்டார்.