பக்கங்கள்

பக்கங்கள்

11 டிச., 2014

கோலி அதிரடி சதம்: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா பதிலடி!முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 517 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் தொடக்க
வீரர் வார்னர் (145), கேப்டன் கிளார்க் (128), ஸ்மித் (162) ஆகியோர் சதம் அடித்து அணியை வலுவான இடத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்திய தரப்பில் முகமது சமி, ஆரோன், வினோத் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டும், இசாந்த் சர்மா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அணியின் ஸ்கோர் 30 ஆக இருந்தபோது தொடக்க வீரர் தவான் 25 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் முரளி விஜய்யுடன், புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை சதத்தை கடக்க செய்தது. 88 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 53 ரன் அடித்து அரை சதம் கடந்த முரளி விஜய், ஜான்சன் பந்தில் ஆட்டம் இழந்தார்.

இவரைத் தொடர்ந்து கேப்டன் கோலி களம் புகுந்தார். அவர் புஜாராவுடன் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் நன்றாக விளையாடிய புஜாரா தனது 6வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். கேப்டன் கோலி ஆஸ்திரேலியா பந்துவீச்சை விளாசி தள்ளி 7வது சதத்தை அடித்தார்.

9 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்திருந்த புஜாரா, லயான் பந்தில் போல்டாகி வெளியேறினார். பின்னர் களம் இறங்கிய ரஹானே அபரரமாக விளையாடி அரை சதம் விளாசினார். 10 பவுண்டரிகளுடன் 62 ரன் அடித்திருந்த ரஹானே, லயான் பந்தில் ஆட்டம் இழந்தார்.

தற்போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் கோலி 115 ரன்னிலும், ரோகித் சர்மா 32 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் லயான் 2 விக்கெட்டும், ஜான்சன், ஹரிஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.