பக்கங்கள்

பக்கங்கள்

19 டிச., 2014

தாவூதி கொள்ள ரகசியமாக் பாகிஸ்தானுக்குள் உள் நுழைந்த இந்திய உளவுப்படை 
மும்பை குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபல நிழலுக தாதா
தாவூத் இப்ராகிமை கொல்ல, இந்திய உளவுப் பிரிவான 'ரா' வை சேர்ந்த 9 பேர் பாகிஸ்தானுக்கு ரகசியமாக அனுப்பப்பட்டதாகவும், கடைசி நேரத்தில் வந்த உத்தரவு காரணமாக தாவூத்தை கொல்லும் பணி கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்று 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

தாவூத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா பலமுறை வலியுறுத்தியும், அவன் தங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் அரசு சாதித்து வருகிறது. அவ்வப்போது துபாய்க்கும் சென்றுவந்த தாவூத்தை நாடு கடத்தி இந்தியா கொண்டு வர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அவை பலனளிக்கவில்லை.

அதே சமயம் இப்பொழுதும் தாவூத் பாகிஸ்தானில் இருந்தபடியே, மும்பையில் தனது நிழலுக சாம்ராஜ்யத்தை நடத்திக்கொண்டிருக்கிறான். அவனது கூட்டாளிகள் முன்னர் திரையுலக  நடசத்திரங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை மிரட்டி பணம் பறித்து வந்த நிலையில், காவல்துறை மேற்கொண்ட கடுமையான கண்காணிப்பு மற்றும் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக அவை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் கட்டுமான தொழில், சினிமா தயாரிப்பு உள்ளிட்ட வேறு பல தொழில்களில் தாவூத்தின் ஆட்கள் ஈடுபட்டு உள்ளனர். இதன் மூலம் கிடைக்கும் பல நூறு கோடி ரூபாய் பணம் தாவூத்திற்கு தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் வசிக்கும்அபோட்டாபாத்தில் பல ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்த அல் காய்தா
தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடன், கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தின் 'சீல்' அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதைப்போன்ற அதே பாணியில் தாவூத்தையும் கொல்வதற்கு இந்தியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான உளவு பணியை மேற்கொள்ளும் 'ரா'  ( RAW -Research and Analysis Wing) உளவுப் படை மூலம் திட்டம் தீட்டப்பட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலேயே இதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு, 'ரா' அமைப்பை சேர்ந்த 9 பேர் இப்பணிக்காக தேர்வு செய்யப்பட்டு பாகிஸ்தானுக்குள் ரகசியமாக ஊடுருவ வைக்கப்பட்டுள்ளனர். "சூப்பர் பாய்ஸ்" என்ற சங்கேத வார்த்தை இக்குழுவினருக்கு சூட்டப்பட்டது. இவர்களுக்கு சூடான், பங்காளதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த ஆபரேஷனுக்கு பிரபல உளவு அமைப்பான இஸ்ரேலின் மொசாத்தின் உதவியும் கோரப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து முதலில் தாவூத்தின் இருப்பிடத்தை கண்டறிய களமிறங்கிய "சூப்பர் பாய்ஸ்" குழு, பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு தாவூத்தின் இருப்பிடத்தையும், அவனது அன்றாட நடவடிக்கைகளையும் துல்லியமாக கண்டறிந்தது. அதன்படி தாவூத், கராச்சியில் வசிப்பதும், தினமும் கிளிப்டன் சாலையில் உள்ள தனது வீட்டிலிருந்து ராணுவ குடியிருப்பு வளாகம் ஒன்றிற்கு தினமும் சென்று வருவதும் இக்குழுவினருக்கு தெரியவந்தது. அது தொடர்பான முழு தகவல்களையும் திரட்டிய அவர்கள், பாகிஸ்தானில் தாவூத் இருப்பதற்கான அவனது நடமாட்டத்தை ரகசியமாக வீடியோவிலும் பதிவு செய்துகொண்டார்கள்.

இதனையடுத்து தாவூத்தை கொல்லும் ஆபரேஷனை அரங்கேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்ட அவர்கள், 2013 செப்டம்பர் 13 ஆம் தேதியை அதற்காக தேர்வு செய்தார்கள். தாவூத்திற்கு நாள் குறிக்கப்பட்ட தகவலை மேலிடத்திற்கும் தெரியப்படுத்தி,  அன்றைய தினம் தாவூத் தினமும் காரில் வரும் பாதையில் அவனை சுட்டுக்கொல்வதற்காக
கையில் மறைத்து வைக்கப்பட்ட துப்பாக்கியுடன் "பொசிஷன்" ( position)  எடுத்து 9 கமாண்டோக்களும் தயாராக நின்றனர்.

இந்நிலையில் ஆபரேஷனை அரங்கேற்றும் சில நிமிடங்களுக்கு முன்னர், " ஆப்ரேஷன் கேன்சல்.. வந்துவிடுங்கள்!" என்று இந்த "சூப்பர் பாய்ஸ்" குழுவுக்கு எங்கிருந்தோ வந்த மர்ம போனை தொடர்ந்து, தாவூத்தை கொல்லும் திட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டதாக உளவுத் துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகி உள்ளது.

அதே சமயம் கடைசி நேரத்தில் அந்த போன் அழைப்பை செய்தது யார்? எதற்காக அந்த திட்டம் கைவிடப்பட்டது என்பதற்கான விவரங்களை தெரிவிக்க அவ்வட்டாரங்கள் மறுத்துவிட்டதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.