பக்கங்கள்

பக்கங்கள்

9 டிச., 2014

மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி நிபந்தனை ஜாமீன் முழுமையாக தளர்வு: மதுரை ஐகோர்ட் உத்தரவு

சட்ட விரோதமாக கிரானைட் வெட்டி எடுத்ததாக புகார் கூறப்பட்டது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மீது மதுரை கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் துரை தயாநிதிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. பின்னர் அவர் தாக்கல் செய்த மற்றொரு மனுவின் அடிப்படையில் நிபந்தனை சற்று தளர்த்தப்பட்டது.

துரை தயாநிதி வெளிநாடு செல்வதற்கு 3 நாட்களுக்கு முன்பும், சென்று வந்த பிறகும் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில் தான் சினிமா தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளதால் அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டியுள்ளது. எனவே முன்ஜாமீன் நிபந்தனையை முழுமையாக தளர்த்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதனால் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை ஐகோர்ட் நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது மு.க.அழகிரி சார்பில் ஆஜரான வக்கீல் மோகன்குமார் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசு தரப்பில் ஜாமீன் நிபந்தனை தளர்வுக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் காவல் துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பார் என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி சொக்கலிங்கம் கேட்டபிறகு துரை தயாநிதியின் ஜாமீன் நிபந்தனையை முழுமையாக தளர்வு செய்து உத்தரவிட்டார்.