பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜன., 2015

ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜன.5க்கு ஒத்திவைத்தது பெங்களுரு ஐகோர்ட்!

சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 05.01.2015 திங்கள்கிழமைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தனி அமர்வு அமைத்து 3 மாதங்களுக்குள் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்காக ஜெயலலிதா சார்பில் கடந்த மாதம் அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்தநிலையில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை, நீதிபதி குமாரசாமி விசாரிப்பார் என கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வஹேலா அறிவித்தார். 

இதனிடையே டெல்லியில் உள்ள நீதிபதி குமாரசாமி, இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களுரு திரும்பாததால், நீதிபதி வெள்ளப்பா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.