பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜன., 2015

வருமான வரித்துறை சான்றிதழை ஏற்க வேண்டும்: ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை

 
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் 8வது நாளாக புதன்கிழமை நடைபெற்றது. அப்போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான நாகேஸ்வரராவ், போயஸ் கார்டன் இல்லம் மற்றும் ஹைதராபாத் மாளிகை கட்டடங்களின் மதிப்பு 13 கோடி ரூபாய் என ஊழல் தடுப்புப் பிரிவு கணக்கிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், எந்த அடிப்படையில் இந்த கணக்கீடு நடைபெற்றது என்பதற்கான ஆவணங்கள் எதையும், ஊழல் தடுப்புப் பிரிவு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், ஆண்டுதோறும் வருமான வரி செலுத்தும்போது, இவ்விரு கட்டடங்களின் மதிப்பினை கணக்கிட்டு வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா தெரிவித்திருப்பதாகவும், இதனை ஏற்று அத்துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகவும் நாகேஸ்வரராவ் கூறியுள்ளார்.
 
எனினும், இந்த சான்றிதழை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்க மறுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, வழக்கு விசாரணை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.