பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜன., 2015

தேர்தல் பிரசாரத்தில் ஒரு தரப்பாகச் செயற்பட அரச தொலைக்காட்சி, வானொலிக்குத் தடை

தேர்தல் நிறைவடையும் வரை அரச தொலைக்காட்சி ஒன்றும்   வானொலி ஒன்றும்  மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும்
தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள கடுவெல மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் எதிரணி பொதுவேட்பாளர் சார்பான சட்டத்தரணி சதுன்கமகே பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இந்த இரு  ஊடகங்களிலும் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் ஏனைய ஊடகங்கள் மூலம் ஒளிபரப்பத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் மேலும் பேசுகையில்; பொலநறுவை பல்லேவத்தை கமராலகே மைத்திரிபால யாப்பா சிறிசேனவினால் கடுவெல மாவட்ட நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒரு வேட்பாளரை ஊக்குவிப்பது தொடர்பிலான பிரசாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இதையடுத்தே ஜனவரி 5 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை மேற்படி ஊடகங்களில் ஒளி, ஒலி பரப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகிய மகிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளும் ஜனாதிபதியின் மக்கள் சந்திப்பு என்ற பெயர் அல்லது ஏனைய பெயரில் குறிப்பிடப்படும் நிகழ்ச்சியோ கலந்துரையாடலோ அல்லது தேர்தல் பிரசார அறிவிப்போ  மேற்படி தொலைக்காட்சியிலும் மேற்படி  வானொலியிலும் ஒளி, ஒலி பரப்ப பிரதிவாதிக்கும், நிறுவனத்தில் பணியாற்றும் உறுப்பினர்களுக்கும் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீதிபதி தனது  உத்தரவில், இவ்விரு தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவையில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் ஏனைய  ஊடகங்களில் ஒளி, ஒலி பரப்பவும் தடைவிதித்துள்ளார். இதன்மூலம் ஊடக நிகழ்ச்சி மூலம் சேறுபூசுதல் மற்றும் தனிநபருக்கு களங்கம் ஏற்படுத்தும் பிரசாரம் தடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி எவரும் ஒளி, ஒலி பரப்பினால் நீதிமன்றத்தை அவமதித்ததாக முடியும். அவர்கள் மீது  நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்போமெனவும் அவர் எச்சரித்தார் - See more at: http://www.thinakkural.lk/article.php?local/rtl3wbntxh55263eefceb80818230acocc7e964f89c2d59e8a249915kyucw#sthash.bJahbt8E.dpuf