பக்கங்கள்

பக்கங்கள்

3 பிப்., 2015

விமான நிலையத்தில் ஒருவர் கைது? ஆட்சி மாறினாலும் அட்டுழீயம் குறையவில்லை: அரியம் எம்.பி


இலங்கையில் ஆட்சி மாறினாலும் அட்டுழீயம் குறையவில்லை. புலம்பெயர் தமிழர்களை நாட்டுக்கு திரும்புமாறு அழைக்கும் அரசாங்கம் மறுபக்கம் அவர்களை இரகசியமாக கைது செய்கின்றது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
இன்று காலை டுபாய் நாட்டில் இருந்து இலங்கைக்கு திரும்பிய மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இலங்கை புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்.
கொக்கட்டிச்சோலை 9ம் வட்டாரத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தாமோதரம் பாஸ்கரன் (வயது 29)என்பவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக அவரின் தாயார் என்னிடம் தெரிவித்துள்ளார்.
டுபாய் நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த இவர், மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் பல தடவைகள் நாட்டுக்கு வந்து சென்றுள்ளார். இருந்தும் இன்று இவர் என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது புரியவில்லை.
ஒருபுறம் புலம்பெயர் தமிழர்களை நாட்டுக்கு வருமாறு அழைக்கும் அரசாங்கம், மறுபுறம் அவர்களை விமான நிலையத்தில் கைது செய்கின்றது.
எனவே சமாதானம் வந்துவிட்டது என்று கூறி யாரும் நாட்டுக்கு வரவேண்டாம். அவ்வாறு நாட்டுக்கு வருபவர்களை எந்தவித காரணமும் இன்றி கைது செய்வார்கள் என்பதற்கு இன்று நடந்த விடயமே ஒரு உதாரணம். எனவே நாட்டுக்கு திரும்பும் தமிழர்கள் அவதானம் செலுத்த வேண்டும்.
ஆட்சி மாறியிருக்கின்றதே தவிர தமிழர்கள் மீதான அட்டூழியம் குறையவில்லை. எனவே சுதந்திரம் கிடைத்து விட்டது என்று கூறி யாரும் நாட்டுக்கு வரவேண்டாம் எனக் கூறினார்