பக்கங்கள்

பக்கங்கள்

20 மார்., 2015

7 வருடங்களுக்கு முன் காணாமல் போன இளைஞன் வெலிக்கடை சிறையில்


மன்னாரில் சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன இளைஞர் ஒருவர் வெலிக்கடை சிறையில் இருந்த நிலையில், உறவினர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தை சேர்ந்த அன்டன் கெனிஸ்டன் பிகிராடோ என்ற இந்த இளைஞன் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி வீட்டில் இருந்த போது இனந்தெரியாதவர்களினால் கடத்திச் செல்லப்பட்டார்.
கடத்திச் செல்லப்பட்ட மகனை கண்டுபிடிப்பதற்காக அவரது தாய், மனித உரிமை அமைப்புகள், அரசியல்வாதிகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு உட்பட அனைத்து இடங்களுக்கு அறிவித்து தேடிவந்ததுடன் அவர் பற்றிய எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.
எனினும் இந்த வருடம் ஜனவரி மாதம் வெலிக்கடை சிறையில், கொண்டாடப்பட்ட பொங்கல் விழா தொடர்பான புகைப்படம் ஊடகங்களில் வெளியானது. அந்த புகைப்படத்தில் கடத்திச் செல்லப்பட்ட தனது மகன் அன்டன் கெனிஸ்டன் இருப்பதை அவரது தாய் அடையாளம் கண்டுள்ளார்.
இதனையடுத்து கெனிஸ்டனின் தாய், மகனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கோரி, சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் ஊடாக ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு மன்னார் நீதவான் அலெக்ஸ்ராஜா ஆசிர்வாதம் முன்னிலையில் கடந்த 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
வழக்கில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதவான், வெலிக்கடை சிறைச்சாலையில் விசாரணைகளை நடத்தி, கெனிஸ்டன் சம்பந்தமாக முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
எந்த காரணத்திற்காக இளைஞனை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவில்லை என்பதை கேட்டறியுமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.