பக்கங்கள்

பக்கங்கள்

21 மார்., 2015

' மக்கள் மீது ஜெயலலிதா அதிக அக்கறையும், நலனும் கொண்டுள்ளார்!'


நாட்டு மக்கள் மீது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அதிக அக்கறையும், நலனும் கொண்டுள்ளார். அதனால்தான் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
''நாடாளுமன்றத்தில் குறுகிய காலத்தில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு ஆதரவு அளித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்த கட்சி அனுபவம் இல்லாத, ஊழல் நிறைந்த கட்சி. அதனால்தான் அவர்கள் எதிர்க்கிறார்கள்.

தற்போது நிலக்கரி மற்றும் கனிம வள மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு வளர்ச்சியின் பாதையில் செல்லும், இந்த மசோதாக்களால் மத்திய அரசு மட்டுமல்லாமல், மாநில அரசுகளும் பயன்பெறும்.

அதேபோல், நிலம் கையகப்படுத்தும் சட்டமும் அவசியம். அதன் மூலம் நாட்டில் அதிக தொழிற்சாலைகள் உருவாகும். நாட்டு மக்கள் மீது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அதிக அக்கறையும், நலனும் கொண்டுள்ளார். அதனால்தான் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் ஆதாயத்துக்காக ஆதரவு தந்ததாக தமிழ்நாட்டின் பெரிய தலைவரான தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார். கருணாநிதி இதுவரை எவ்வளவோ மசோதாக்களை ஆதரித்து இருக்கிறார். அந்த மசோதாக்களையெல்லாம், ஆதாயம் எதிர்பார்த்துதான் அவர் ஆதரித்தாரா?

மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு மோடி அரசு சாதகமாக இருக்கிறது. மேலும், விவசாயத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை மோடி அரசு செய்யும்.

நாட்டில் சிறுபான்மையினர் தாக்கப்படுவதற்கு மத்திய அரசு மட்டும் பொறுப்பல்ல. சட்டம்–ஒழுங்கை மாநில அரசுதான் காப்பாற்ற வேண்டும். சிறுபான்மையினர் தாக்கப்படுவதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுக்கும்'' என்றார்.