பக்கங்கள்

பக்கங்கள்

10 மார்., 2015

காலாவதியாகிவிட்டது நாடாளுமன்று; கலைத்துவிட்டுத் தேர்தலை நடத்துக


இலங்கையின் தற்போதைய நாடாளு மன்றம் காலாவதியாகியுள்ளது எனத் தெரிவித்த பெருந்தோட்டத்துறை அமைச்சர்
லக்ஷ்மன் கிரியயல்ல, நாடாளுமன்றத்தைக் கலைத்து தாமதமின்றித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற தெளிவான நிலைப்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளது என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதியும் எம்முடையவர் பிரதமரும் எம்முடையவர்; அரசும் எம்முடையது; எதிர்க் கட்சியும் எம் முடையது. எனவே, தேர்தலொன்றுக்குச் செல்ல ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தப் பயமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
"மஹிந்த ராஜபக்ச­வின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்டது தான் இந்த நாடாளுமன்றம். தற்போது இது காலாவதியான பொருளாகிவிட்டது. புதிய அரசு, புதிய ஜனாதிபதி, புதிய பிரதமரைக்கொண்ட புதிய ஆட்சி உருவாகியுள்ளது. 
இந் நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலொன்றுக்குச் செல்லவேண்டும். தேர்தலுக்குச் செல்வதில் எமக்குப் பயம் இல்லை.'' என்று அவர் கூறினார்.
"அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த பலர் அலைந்து திரிகின்றனர். 
தேர்தலின் பின்னர் தேசிய அரசொன்றை நிறுவுவதற்கு நான் எதிர்ப்பு அல்ல. உடனடியாகத் தேர்தலொன்றை நடத்த வேண்டும் என்று மக்கள் எதிர் பார்க்கின்றனர்.
புதிய தேர்தல் முறைக்கு அமைய அடுத்த தேர்தலை நடத்துவது தொடர்பில் அனைத்துத் தரப்பின ரிடையேயும் இணக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதியும், பிரதமரும், தேர்தல்கள் ஆணையாளருடன் பேச்சு நடத்திவருகின்றனர். தேர்தலை நடத்துவதில் ஏற்படும் தாமதம்தான் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பிரச்சினையாக உள்ளது'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.