பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2015

எல்லை நிர்ணய நடவடிக்கைகளை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்குமாறு கூட்டமைப்பும் மு.காவும் கோரிக்கை


தேர்தலுக்கான எல்லை நிர்ணய நடவடிக்கைகளை குறைந்தது 10 வருடங்களுக்காவது ஒத்தி வைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும் கோரிக்கை விடுத்துள்ளன.
பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இந்த நடவடிக்கை குறிப்பாக வடமாகாணத்தில் தற்போதைக்கு மேற்கொள்ளப்பட கூடாதென கேட்டு கொண்டுள்ளன
மேலும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டதன் பின்னரே எல்லை நிர்ணய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரியுள்ளன.
இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமெனவும், யுத்தம் இடம்பெற்றபோது அதிகளவிலானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினர்.
தற்போது எல்லை நிர்ணயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் என தெளிவுபடுத்திய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயர் பாதுகாப்பு வலய காணிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதுமாத்திரமல்லாது, முஸ்லிம் காங்கிரஸும் வட, கிழக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டதன் பின்னரே எல்லை நிர்ணய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் எவ்வித நெகிழ்வுத்தன்மையையும் காண்பிக்காது அரசாங்கம் வெகுவிரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்