பக்கங்கள்

பக்கங்கள்

2 ஏப்., 2015

ஏமனில் சிறையை உடைத்து 300 சிறைக்கைதிகளை விடுதலை செய்த அல்கொய்தா



ஏமனில் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிறைச்சாலைக்குள் புகுந்த அல்கொய்தா தீவிரவாதிகள், தங்கள் இயக்கத்தின் மூத்த தலைவர் உட்பட 300 சிறைக்கைதிகளை விடுவித்தனர். 

ஹாத்வார்த் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் அல்கொய்தா மூத்த தலைவர்களில் ஒருவரான காலித் பாதார்பி என்பவர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளார். இன்று இந்த சிறைக்குள் புகுந்த அல்கொய்தா தீவிரவாதிகள் சிறையை உடைத்து தங்கள்  தலைவர் காலித் பாதர்பி உட்பட 300 பேரை விடுவித்தனர். சிறைச்சாலைக்குள் நடைபெற்ற இந்த சம்பவத்தில் இரண்டு சிறைக்காவலர்கள் மற்றும் ஐந்து சிறைக்கைதிகள் பலியாகினர். 

ஹாத்வார்த் மாகாணத்தில் உள்ள சிறையில் மட்டுமின்றி மாகாண தலைநகரான முகல்லாவில் உள்ள ஒரு வணிக வளாகத்திலும், வங்கி கிளை மற்றும் போலீஸ் தலைமையகத்திலும் அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏற்கனவே போர் பதற்றத்தால் அச்சத்தில் இருக்கும் அங்குள்ள மக்கள், தற்போதைய சிறை தகர்ப்பு சம்பவத்தால் மேலும் அச்சத்தில் உள்ளனர். 

ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், அங்கு வசிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவது நினைவுகூறத்தக்கது.