பக்கங்கள்

பக்கங்கள்

27 ஏப்., 2015

நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள்

நேபாளத்தில் கடந்த 80 வருடங்களில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கத்தினால் காத்மண்டு பள்ளத்தாக்கு மற்றம் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் பல்வேறு இந்து கோவில்கள் அழிந்து விட்டன.  நிலநடுக்கத்தினால், கஸ்தமண்டபம், பாஞ்சிடேல் கோவில், 9 அடுக்கு பசந்தபூர் தர்பார், தசவதார கோவில், கிருஷ்ண மந்திர் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் அழிந்து விட்டன.

காத்மண்டு என்ற பெயர் ஏற்பட காரணமான கஸ்தமண்டபம் கடந்த 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மர சிற்பங்கள் கொண்ட கோவில் ஆகும்.  வரலாற்று ஆய்வாளரான புருஷோத்தம லோசன சிரேஸ்தா என்பவர் கூறும்போது, இந்த சிற்பங்கள் முழுவதுமாக அழிந்துபோக கூடும்.  இவற்றை மீண்டும் உருவாக்குவது என்பது தொழில் நுட்ப ரீதியில் கடினமானது மற்றும் அதிக செலவு மிக்கது.

காத்மண்டு, பக்தாபூர் மற்றும் லலித்பூர் பகுதிகளில் உலக பாரம்பரிய இடங்களாக அங்கீகரிக்கப்பட்ட பெரும்பான்மையான சிற்பங்களை நாம் இழந்து விட்டோம்.  அவற்றின் பழைமையான நிலைக்கு அவற்றை திரும்ப கொண்டு வர முடியாது என்று அவர் கூறியுள்ளார்.  நேபாளத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான நிலநடுக்கம் மற்றும் அதன் தொடர்ச்சியாக நாள் முழுவதும் நடந்த நிலஅதிர்வுகள் ஆகியவற்றால் காத்மண்டு நகரில் உள்ள பசந்தபூர் தர்பார் சதுக்கத்தில் உள்ள 80 சதவீத கோவில்கள் அழிந்து விட்டன.

காத்மண்டுவில் உள்ள புகழ் பெற்ற தரஹாரா உள்ளிட்ட நூற்றாண்டுகள் பழைமையான வரலாற்று சிற்பங்கள் ஆகியவை சிதைந்து போய் விட்டன.  கடந்த 83 வருடங்களுக்கு முன்பு 1934ம் ஆண்டு இதுபோன்று நடந்த நிலநடுக்கத்தில் 10 ஆயிரம் பேர் பலியானதுடன், தரஹாரா துண்டுகளாக உடைந்தும் போனது.  அதேபோன்று பதான் மற்றும் பக்தபூரில் உள்ள 12க்கும் மேற்பட்ட கோவில்கள் மற்றும் வரலாற்று கட்டிடங்கள் சிதைந்தும் அல்லது பகுதி சிதைந்தும் உள்ளன.