பக்கங்கள்

பக்கங்கள்

13 ஏப்., 2015

ஆற்காடு: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு


ஆற்காட்டை அடுத்த சாம்பல் சிவபுரத்தைச் சேர்ந்த குட்டி - கீதா தம்பதியினரின் இரண்டரை வயது மகன் தமிழரசன். இவன் கூரான்பாடியில் உள்ள தனது தாத்தாவின் விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். 

இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் கிணற்றைச் சுற்றி இரண்டு ஜெ.சி.பி. இயந்திரங்களைக் கொண்டு பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

அந்தப் பகுதி பாறை என்பதால் பள்ளம் தோண்டுவதில் காலதாமதம் ஆனது. 450 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றில், குழந்தை தமிழரசன் 27 அடி ஆழத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டது. 

குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவசர ஊர்திகளுடன் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். மேலும், குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மேலாண்மைக்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இந்தநிலையில் மாலை குழந்தை மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தை தயாராக இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, வாலாஜாபேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனை குழந்தைகள் நல மருத்துவக் குழுத் தலைவர் ராஜு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வேலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகோபாலும் இந்த தகவலை உறுதி செய்தார்.