பக்கங்கள்

பக்கங்கள்

7 ஏப்., 2015

தூய குடிநீருக்கான போராட்ட செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டிருந்த ஊடக வியலாளர்கள் மீது கொலை முயற்சி


தூயகுடிநீருக்காக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டம் தொடர்பான செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டிருந்த
முன்னணி இளம் ஊடகவியலாளர்கள் மீது யாழில் கொலை முயற்சி ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை காவல்துறையினரே இந்த முயற்சியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றிரவு நல்லூரில் வைத்து கத்திகளுடன் கொலை நோக்கத்துடன் ஊடகவியலாளர்களை இருகாவல் துறையினர் துரத்தியுள்ளனர்.

நல்லூரில் இரவிரவாக தொடரும் உண்ணாவிரத போராட்டம் தொடர்பான செய்திகளை சேகரித்து கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்ட ஊடகவியலாளர்களை, நல்லூர் பின்வீதியில் கத்தியுடன் மது போதையில் மோட்டார் சைக்கிளில்  இருந்த பொலிஸார் இருவர் வழிமறித்துள்ளனர்.

அதையடுத்து சுதாகரித்துக்கொண்ட ஊடகவியலாளர்கள் தப்பியோட முற்பட குறித்த இரு பொலிஸாரும் ஆரியகுளம் சந்தி வரை அவர்களை துரத்தி சென்றுள்ளனர். அவர்களுள் ஒருவர் தலைக்கவசம் அணிந்திருந்த போதும் மற்றைய நபர் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை.

காவல்துறை அணியும் ரீசேர்ட்களை அவர்கள் அணிந்திருந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக யாழ்.காவல்நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்றிருந்த வேளை அங்கு குறித்த நபர்கள் பயணித்திருந்த மோட்டார் சைக்கிள் நின்றிருந்தது.

சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் முறைப்பாட்டை செய்ய ஏதுவாக தம்மை ஊடகவியலாளர்கள் என அடையாளப்படுத்தும் தகவல்திணைக்கள அட்டைகளை சமர்ப்பித்த போதும் அது காவல்நிலையத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கவில்லை.

கொலை முயற்சியில் தப்பித்த ஊடகவியலாளர்கள் தினக்குரல், தெரண, ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.