பக்கங்கள்

பக்கங்கள்

16 ஏப்., 2015

முல்லைத்தீவுக்கு விரைவில் புதிய மத்திய பஸ் நிலையம்; உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் உறுதி


news
வவுனியா மாவட்ட மத்திய பஸ் நிலையம் தற்போது புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றது. அதன் திறப்புவிழா முடிந்ததன் பின்னர் விரைவில் முல்லை மாவட்டத்தில் புதிய மத்திய பஸ்தரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் நடப்படும். 
 
அத்துடன் அதன் கட்டட வேலைகள் துரிதகதியில் நடைபெறுவதற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் - இவ்வாறு உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ஆர்.எம்.றஞ்சித் மத்தும பண்டார, உறுதியளித்துள்ளார்.
 
வவுனியா தொடக்கம் கே.கே.எஸ் வரையான புகையிரதப் பாதையின் பாதுகாப்புக்கடவை அமைப்பதற்கான சகல நடவடிக்கையும் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ஆர்.எம்.றஞ்சித் மத்தும பண்டாரவுக்கும் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையில் கடந்தவாரம், கொழும்பிலுள்ள அமைச்சு அலுவலகக் கேட் போர் கூடத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது. அதிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
இந்தச் சந்திப்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எம்.றஞ்சித் மத்தும பண்டார, அமைச்சின் செயலாளர், இணைப்புச் செயலாளர், முற்போக்கு தமிழ் தேசிய கட்சி சார்பாக செயலாளர் நாயகம் எஸ். விஜயகாந்த், முல்லை மாவட்ட அமைப்பாளர் க.டக்ளஸ், யாழ். மாவட்ட அமைப்பாளர் ஜே.ராஜ் குமார், கிளிநொச்சி, முல்லைத் தீவு இளைஞர் பேரவை உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.