பக்கங்கள்

பக்கங்கள்

3 ஏப்., 2015

மத்திய அமைச்சராகிறார் மெஹபூபா: நஜ்மா ஹெப்துல்லாவுக்கு 'கல்தா'!


மத்திய அமைச்சரவையை அடுத்த வாரம் விரிவுபடுத்த பிரதமர் மோடி திட்டமிட்டிருப்பதாகவும், இதில் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் மெஹபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜனதாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக மெஹபூபாவின் தந்தை முப்
தி முகமது சையீத் உள்ளார். அமைச்சரவையில் பா.ஜனதாவினரும் இடம்பெற்றுள்ளனர். 

இந்நிலையில் மாநிலத்தில் கூட்டணி அமைத்தது போன்று மத்தியில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சியில் மெஹபூபா முப்தியை சேர்த்துக்கொள்ள அக்கட்சித்தலைமை முடிவு செய்துள்ளதாகவும், அதன்படி வருகிற 8 ஆம் தேதியன்று மத்திய அமைச்சரவையை மோடி விரிவுபடுத்த உள்ளதாகவும், இதில்  சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா நீக்கப்படலாம் என்றும், அவருக்குப்பதிலாக மெஹபூபா நீக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் இணை அமைச்சர்களாக உள்ள முக்தார் அப்பாஸ் நக்வி, ராஜீவ் பிரதாப் ரூடி மற்றும் மனோஜ் சின்ஹா ஆகிய 3 பேரும் கேபினட் அமைச்சர்களாக பதவி உயர்த்தப்படலாம் என்றும், மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹாவுக்கு கார்ப்பரேட் விவகார இலாகா கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்படலாம் என்றும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் மத்திய அமைச்சரவையில் தங்களுக்கு கூடுதல் இடம் தரப்பட வேண்டும் என கூட்டணி கட்சியான சிவசேனா நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரும் நிலையில், அந்த கட்சியின் எம்.பி. அனில் தேசாய்க்கு தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

இதனிடையே நஜ்மா ஹெப்துல்லா, மாநிலம் ஒன்றின் ஆளுநராக நியமிக்கப்பட இருப்பதாலேயே அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட இருப்பதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.