பக்கங்கள்

பக்கங்கள்

8 ஏப்., 2015

சுட்டுக்கொல்லப்பட்ட தொழிலாளர்களின் உறவினர்கள் திருப்பதி சென்றதால் பதற்றம்!


 ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத் தொழிலாளர்களின் உறவினர்கள் திருப்பதியில் குவிந்ததால் பரபரப்பு நிலவுகிறது.மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

திருப்பதி சேஷாசலம் மலையில் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் 20 பேர் உடல்களை நேற்று திருப்பதி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இவர்களில் 8 பேர் திருவண்ணாமலை
மாவட்டத்தையும், 8 பேர் விழுப்புர மாவட்டத்தையும் 4 பேர் வேலூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.

அங்குள்ள பிண அறையில் 20 உடல்களும்  வைக்கப்பட்டன. பலியானவர்கள் உடலை நேற்று இரவே பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் டாக்டர்கள் குழுவினர் இன்று காலையில் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். இன்று காலை 6 மணிக்கு பிரேத பரிசோதனை தொடங்கியது.

இதையடுத்து, தமிழ் நாட்டில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் திருப்பதியில் குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். யாரையும் கூட்டமாக நின்று பேச அனுமதிக்க வில்லை.

ஒவ்வொரு உடல்களாக வரிசையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக ஆந்திர போலீசார் தெரிவித்தனர்.

தொழிலாளர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து உடல்களை அடையாளம் காட்டியும், மேலும் சில அடையாளங்களையும் தெரிவித்தால் உடனே உடல்கள் ஒப்படைக்கப்படும் என ஆந்திர போலீசார் அறிவித்துள்ளனர்