பக்கங்கள்

பக்கங்கள்

1 ஏப்., 2015

'கொம்பன்' படத்திற்கு தடை இல்லை: மனு தள்ளுபடி!




 'கொம்பன்' திரைப்படத்திற்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக படம் இன்று (ஏப்ரல் 1ஆம் தேதி) வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டபோதிலும், திடீரென ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

நடிகர் கார்த்தி நடித்துள்ள கொம்பன் படத்துக்கு தடை விதிக்க கோரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'கொம்பன்' படம் வெளியானால் தென் தமிழகத்தில் ஜாதி மோதல் ஏற்படும் என்றும், எனவே, ஏப். 2ல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு, கொம்பன் திரைப்படத்தை ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரவிராஜபாண்டியன், ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் மற்றும் வழக்கறிஞர்கள் பார்வையிட்டு, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி நீதிபதிகள் நேற்று படத்தை பார்வையிட்டனர். ஆனால், படம் திரையிடப்பட்டு 3 நிமிடங்களுக்குள் நீதிபதிகள் 2 பேரும் தொடர்ந்து படத்தை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் தியேட்டரில் இருந்து வெளியேறி சென்றனர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அவர்கள் சென்று அங்கிருந்தபடி அறிக்கை தயாரித்து உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு ஃபேக்ஸ் அனுப்பி வைத்தனர். 

இதனிடையே, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கிருஷ்ணசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் பீட்டர் ரமேஷ்குமார், பாஸ்கர் மதுரம் ஆகியோரும், தயாரிப்பாளர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விடுதலையும், இயக்குநர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தியும், தணிக்கை வாரியத்தின் வழக்கறிஞர் லட்சுமணனும் வாதிட்டனர்.

இதையடுத்து, அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பளிக்கப்படும் என அறிவித்தனர்.
அதன்படி இன்று பிற்பகல் தீர்ப்பளித்த நீதிபதிகள், கொம்பன் திரைப்படத்திற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
காட்சிகள் ரத்து 

முன்னதாக ஏற்கனவே அறிவித்தபடி இன்று கொம்பன் படம் ரிலீஸாகும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படம் ரிலீஸாக இருந்த தியேட்டர்கள் திடீரென காட்சிகளை ரத்து செய்துவிட்டு, முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி அளித்தன.

கொம்பன் படம் தொடர்பான தீர்ப்பு வெளியான பிறகே படத்தை ரிலீஸ் செய்வது என தியேட்டர் உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
திரையிடுதல் தொடங்கியது
இந்நிலையில் தடை கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதால், சூழ்நிலைக்கு தகுந்தவாறு சில தியேட்டர்களில் மாலை 4 மணிக்கும், சில தியேட்டர்களில் முறைப்படி மாலை காட்சி முதலும் திரையிடுதல் தொடங்கியது.