பக்கங்கள்

பக்கங்கள்

6 ஏப்., 2015

உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!



 உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
நீதித்துறை மாநாட்டில் வலியுறுத்தி உள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற நீதித்துறை மாநாட்டில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ''தமிழகத்தின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மாநில அலுவல் மொழியை உயர் நீதிமன்ற தீர்ப்புகள், உத்தரவுகள் மற்றும் விசாரணைகளின் போது பயன்படுத்த அரசியலமைப்புச் சட்டம் வழிவகை செய்திருக்கிறது.

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்ற கடந்த கால நிலைப்பாட்டை மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு விரைவான மற்றும் சரியான நீதியை வழங்குவதைவே நீதித்துறை குறிக்கோளாக கொள்ள வேண்டும். நீதித்துறைக்கேற்ற உகந்த சூழலை ஏற்படுத்தினால் மட்டுமே அதன் சுதந்திரத்தை உறுதிசெய்ய முடியும்.

நடப்பு நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் நீதித்துறைக்கு 809 கோடியே 70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நீதித்துறை உள்கட்டமைப்புக்கான நிதியை மத்திய அரசு தொடர்ந்து வழங்கினால் 2017 ஆம் ஆண்டுக்குள் அனைத்து நீதிமன்றங்களும் சொந்த கட்டடத்தில் இயங்கும் நிலை ஏற்படும். தமிழகத்தில் போதிய அளவு நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். மகளிருக்கு எதிரான வழக்குகளை விரைந்து தீர்க்க நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது" என்றார்.