பக்கங்கள்

பக்கங்கள்

10 மே, 2015

பெங்களூர் ஐகோர்ட்டை சுற்றி போலீஸ் குவிப்பு : தமிழக எல்லையில் வாகனங்கள் கண்காணிப்பு



 அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா, தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், உறவினர் இளவரசி ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா உட்பட நான்கு பேரும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். மேல் முறையீட்டு மனு மீது கடந்த ஜனவரி 5ம் தேதி தொடங்கி மார்ச் 11ம் தேதி வரை நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன் விசாரணை நடந்தது. பின் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரத்தில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் மார்ச் 18ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அந்த காலககெடுவுக்குள் தீர்ப்பு வழங்குவது கடினம் என்பதால், கூடுதல் அவகாசம் கேட்டு நீதிபதி குமாரசாமி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். கடந்த ஏப்ரல் 18ம் தேதி ஜெயலலிதா ஜாமீ்ன் மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, கால அவகாசம் கேட்டு நீதிபதி குமாரசாமி எழுதிய கடிதம் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

நீதிபதியின் கோரிக்கையை ஏற்று தீர்ப்பு வழங்க மே 12ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி தலைமை நீதிபதி உத்தரவிட்டார். ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள காலகெடு வரும் 12ம் தேதியுடன் முடியும் நிலையில், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை வரும் மே 11ம் தேதி காலை 11 மணி்க்கு வழங்குவதாக கர்நாடக உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய பெங்களூரு மாநகர போலீஸ் தயாராகி வருகிறது. இது குறித்து பெங்களூரு மாநகர கூடுதல் போலீஸ் கமிஷனர் (சட்டம் ஒழுங்கு) ஆலோக்குமார் கூறும்போது, ‘தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு மீதான தீர்ப்பு கடந்தாண்டு செப்டம்பர் 27ம் தேதி வெளியாகியபோது எந்த வித சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாமல் முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.  

அதேபோல் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வெளியாகும் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் மே 11ம் தேதியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும். தீர்ப்பு நாளில் மாநில எல்லையில் சிறப்பு சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்படும். தீர்ப்பு நாளான்று சம்மந்தப்பட்டவர்கள் தவிர, நீதிமன்றத்திற்குள் வேறு யாரையும் அனுமதிக்க மாட்டோம். தேவைபட்டால் நீதிமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறபிக்கப்படும்’ என்றார். இதனிடையில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு நாளில் பாதுகாப்பு கொடுப்பது குறித்து உயரதிகாரிகளுடன் மாநில காவல்துறை தலைவர் ஓம் பிரகாஷ், மாநகர போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி, கூடுதல் போலீஸ் கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) ஆலோக்குமார், கூடுதல் போலீஸ் கமிஷனர் (குற்றம்) ஹரிசேகரன், இணை போலீஸ் கமிஷனர்கள் சோனியா நாரங்க், கமல்பாந்த் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்திலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவை பிறப்பித்து பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி நேற்று உத்தரவிட்டார். 

இந்த உத்தரவு நேற்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. தடை உத்தரவு நாளை மாலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். இந்த தடை உத்தரவு இன்று மாலையிலிருந்து 24 மணி நேரத்துக்கு மட்டுமே அமல்படுத்தபடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அசம்பாவித சம்பவங்கள் நடக்கிறதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக கர்நாடக உளவுத் துறை அம்மாநில உள்துறைக்கு தகவல் கொடுத்துள்ளதையடுத்து 144 தடை உத்தரவு நேற்று மாலையிலிருந்து தொடங்கியது. இதற்கிடையே, தமிழகத்திலிருந்து பெங்களுருக்குள் நுழையும் முக்கிய நுழைவு வாயிலான ஓசூர் அத்திப்பலேயில் தமிழகத்திலிருந்து வரும் வாகனங்களை குறிப்பாக தமிழக பதிவெண்கள் கொண்ட வாகனங்களைத் தீவிரமாக சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய வாகனங்களாக இருந்தால் தமிழக எல்லையிலேயே திருப்பி அனுப்பப்படும் என்று கர்நாடக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இருந்தபோதிலும், மாநகரில் உள்ள ஒட்டல், லாட்ஜ்களில் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் புக்கிங் செய்துள்ளனர். 

மேல் முறையீட்டு வழக்கில் நீதிமன்றம் உத்தரவிடாத பட்சத்தில் குற்றவாளிகள் நீதிமன்றத்துக்கு வரவேண்டிய தேவையில்லை என்பதால் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நாளை பெங்களூர் வரவில்லை. இதனால், அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் முக்கிய நிர்வாகிகளும் பெங்களூர் வரமாட்டார்கள் என்று அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. இதனால், பெரிய அளவில் அதிமுகவினர் கூட்டம் வரப்போவதில்லை என்றும் அதிமுக வக்கீல்கள் மட்டுமே வருவார்கள் என்றும் அதிமுகவினர் தரப்பில் கூறப்படுகிறது. அதிமுக வக்கீல்களும் உரிய அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே நீதிமன்ற வளாகத்திற்குள் செல்ல முடியும் என்று பெங்களூர் அதிமுகவினர் தரப்பில் கூறப்படுகிறது. உயர் நீதிமன்ற வளாகத்தில் அனுமதி கொடுக்கும் விஷயத்தில் பெங்களூர் போலீசார் தெளிவான தகவலை தரவில்லை. இன்று காலை முதல்வர் தலைமையில் போலீஸ் மற்றும் முக்கிய அதிகாரிகள் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

முன்னெச்சரிக்கையாக என்ன நடவடிக்கை எடுப்பது குறித்து குறித்து போலீஸ்துறை ஆலோசகர் ராமானுஜம், டிஜிபி அசோக்குமார், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.