பக்கங்கள்

பக்கங்கள்

30 மே, 2015

ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஓரிரு நாட்களில் முடிவு: கர்நாடக அமைச்சர் பேட்டி



ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

பெங்களுருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்டப்படி 90 நாள் அவகாசம் உள்ளது. தற்போது 15, 20 நாட்கள் கூட ஆகவில்லை. அனைத்து அம்சங்கள் குறித்தும் சட்டத்துறை ஆராய்ந்து வருகிறது. அரசு தலைமை வழக்கறிஞரிடம் சில விளக்கங்கள் கோரியிருந்தோம். அதற்கான கடிதம் கிடைத்துள்ளது.

அரசு சிறப்பு வழக்கறிஞரின் நீண்ட கடிதம். அரசு தலைமை வழக்கறிஞரின் கருத்து. சில விளக்கங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் பற்றியும் சட்டத்துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து ஓரிரு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். 
 
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் கடந்த 11-ம் தேதியன்று (மே-11) விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் வெளிப்படையான கணிதப் பிழைகள் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார் ஆகியோர் பரிந்துரைத்துள்ளனர்.

அதேவேளையில், ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வதில் கர்நாடக அரசு அவசரம் காட்டக்கூடாது என கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்டப்பிரிவு வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.