பக்கங்கள்

பக்கங்கள்

30 மே, 2015

நோர்வே தூதுவர் தலைமையில் நீரியல் நிபுணர்கள் வடக்கு விவசாய அமைச்சருடன் சந்திப்பு


இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீற் லோகீன் தலைமையில் நோர்வே நீரியல் நிபுணர்கள் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனை அவரது
அலுவலகத்தில் இன்று   பிற்பகல் சந்தித்துக் கலந்துரையாடினர்.
 
வடமாகாண சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அழைப்பின் பேரில், இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அண்மையில் சுன்னாகம் பகுதியில் தரையை ஊடுரும் றேடாரைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது. 
 
இதற்கான அனுசரணையை நோர்வே வழங்கியிருந்தது. இதன் அடுத்த கட்ட ஆய்வுக்காகவே நோர்வே புவிச்சரிதவியல் நிறுவகத்தைச் சேர்ந்த நீரியல் நிபுணர்கள் யாழ்ப்பாணம் வந்துள்ளனர். 
 
கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் வந்தடைந்த நோர்வே நிபுணர்கள் நொதேண்பவர் மின் நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளையும் சென்று பார்வையிட்டிருந்தார்.
 
அத்தோடு,சுன்னாகம் பிரதேச ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும் வடமாகாண சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவைச் சேர்ந்தவர்களையும், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தைச் சேர்ந்தவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். 
 
இவற்றையடுத்தே,தமது அவதானிப்புகளைத் தெரிவிக்கும் முகமாக இன்று விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனை சந்தித்துள்ளனர். 
 
எனினும்  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட நிலத்தடிப் படிவுகள் தொடர்பான ஆய்வுகளின் முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
 
இம்முடிவுகள் வெளியான பின்பு நோர்வே நிபுணர்குழு தமது சுயாதீன ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இன்றைய சந்திப்பில் விவசாய அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி சோ.சண்முகானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=340584057629137184#sthash.BLq4GK21.dpuf