பக்கங்கள்

பக்கங்கள்

7 மே, 2015

அடாத்தாக முளைத்த விகாரைக்கு அங்கீகாரம்?


நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களால், எந்தவொரு அனுமதியும் பெறப்படாது அமைக்கப்பட்ட விகாரை, பெளத்த சாசன அமைச்சின்
கீழ் அண்மையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
அத்துடன் அங்கு ஏற்கனவே அத்திபாரம் வெட்டப்பட்ட நிலையிலிருந்த வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
 
நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில், ஒரு தொகுதி சிங்கள மக்கள் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அத்துமீறிக் குடியேறினர். 
 
அவர்கள் எந்தவொரு அனுமதியும் பெற்றுக் கொள்ளாது, அடாத்தாகப் பிடித்த காணிகளில் வீடுகளைக் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 
 
அத்துடன் அவர்கள் தங்கியுள்ள பகுதியில் விகாரை ஒன்றையும் அமைத்தனர். இந்த விகாரை அமைப்பதற்கும் எந்தவொரு முறைப்படியான அனுமதியும் பெற்றுக் கொள்ளப்படவில்லை.
 
 குறித்த விகாரையைப் பதிவு செய்வதற்காக, தென்மராட்சி பிரதேச செயலகத்தை, விகாரையின் பிக்கு அணுகியுள்ளார். இதன் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இதற்கான அனுமதி வழங்குவதற்கான அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். 
 
இதன் பின்னர், பெளத்தசாசன அமைச்சின் கீழ், குறித்த விகாரை பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
தற்போது அங்கு 5 குடும்பங்கள் வரையிலேயே நிரந்தரமாகத் தங்கியுள்ளன. ஆனாலும் 72 குடும்பங்கள் வரையில் பதிவுகளை மேற்கொண்டுள்ளன. இதனை விட, ஏற்கனவே அத்திபாரம் வெட்டபட்ட நிலையிலிருந்த வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளில் அங்கு தங்கியுள்ள சிங்கள மக்கள் ஈடுபட்டுள்ளனர்