பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூன், 2015

300-ரூபாய் பணத்துக்காக லாரி ஓட்டுனர் கொலை; பெண் வேடமிட்டு கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது



சேலம் மாவட்டம், மேட்டூர் அருகிலுள்ள தங்கமாபுரி பட்டினம், பெரியார் நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. லாரி ஓட்டுனரான இவர், கடந்த, 4-ம் தேதி சித்தோடு அருகிலுள்ள குமிளன்பரப்பு வாய்க்கால் மேடு பேருந்து நிறுத்தம்  அருகில் கை, கால்கள் கட்டப்பட்டு முகம், தலையில் பலமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் ஓட்டி வந்த லாரி, ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

இதுகுறித்து, பொன்னுசாமியின் மகன் விஸ்வநாதன், சித்தோடு போலீஸில் புகார் செய்தார். கொலையாளிகளை பிடிக்க, இன்ஸ்பெக்டர்கள் விக்னேஸ்வரன், சண்முகம், ரமேஷ், சிவகுமார் ஆகியோர் தலைமையில், நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

நிகழ்விடத்தில் கிடந்த மதுபாட்டில்களில் இருந்த எண்களை கொண்டு அந்த பாட்டில்களை வாங்கிய டாஸ்மாக் கடையில் விசாரணை செய்ததில், ஈரோடு அருகிலுள்ள ஆர்.என்.புதூர் மாதேஸ்வரன் நகரை சேர்ந்த குமார்(வயது-26), என்பவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அவர் பயன் படுத்திய மொபைல் ஃபோன் கைப்பற்றினர்.

அவருடைய மொபைல் பொன்னுசாமி கொலையான அன்று இரவு அவர் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு அருகிலிருந்த டவரில் செயல்பட்டது தெரிந்தது.

பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டத்தில், ஈரோடு, சூரம்பட்டி, பாரதிபுரம் பாஸ்கரன் (வயது-26), சூரம்பட்டி அண்ணா வீதியை சேர்ந்த  ஈஸ்வரன்(வயது-23), ஆகியோருடன், கட்டிட பெயிண்டிங் வேலை செய்தேன். எங்களுக்குள் ஓராண்டாக பழக்கம் உள்ளது. எங்களுக்கு குடிபழக்கம், ஆடம்பர செலவுக்கு அதிக பணம் தேவைப்பட்டது.

அதற்காக, லாரி டிரைவர்கள் தாங்கள் கொண்டுவந்த சரக்கை இறக்கி விட்டுச் செல்லும் பொது அவர்களிடம் வாடகைப்பணம் இருக்கும், அவர்களுக்கு, பெண் சபலம் இருக்கும். எனவே, தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் லாரி டிரைவர்களை, இரவில் பெண் வேஷமிட்டு, டார்ச் லைட் அடித்து அழைத்து, அவர்களிடம் பணம் பறிக்கலாம், என திட்டமிட்டோம்.

கடந்த, ஆறு மாதத்துக்கு முன், திருச்செங்கோடு- பரமத்தி வேலூர் ரோட்டிலும், ஒரு மாதத்துக்கு முன், பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையிலும், பெண் வேஷமிட்டு லாரி டிரைவர்களிடம் பணம் பறித்தோம்.

சம்பவத்தன்று, சித்தோடு டாஸ்மாக் கடையில், மூவரும் மது குடித்தோம். பின்னர் பெண் வேஷமிட்ட நான், சாலை ஓரமாக நின்று கொண்டு “ டார்ச் லைட்” அடித்தேன். லாரியை நிறுத்தி விட்டு, டிரைவர் பொன்னுசாமி கீழே இறங்கி வந்தார்.

அவரை நாங்கள் மூவரும் சேர்ந்து தடியால் தாக்கி, கட்டிப் போட்டுவிட்டு அவரது சட்டையிலும், லாரியின் கேபினிலும் பணத்தை தேடினோம். 300 ரூபாய் பணம், மொபைல் ஃபோன் மட்டுமே அவரிடம் இருந்தது. பின்னர்,  மூவரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டோம் என அவர் கூறினார். குமார் கொடுத்த தகவலின் பேரில் பாஸ்கரன், ஈஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட மூவரையும், ஈரோடு நீதித்துறை மூன்றாம் எண் நடுவர் நீதிபதி கவிதா முன், மூவரையும் ஆஜர்படுத்தினர். 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கோபியில் உள்ள மாவட்ட சிறையில் மூவரும் அடைக்கப்பட்டனர்.