பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூன், 2015

புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர்; கொம்பு முளைத்த பேய்களும் அல்லர்; சிவப்புக் குள்ளர்களும் அல்லர் - கூட்டமைப்பு


"புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்று அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளதை மனதார வரவேற்கின்றோம். புலம்பெயர் தமிழர்களுடன் இந்த அரசு மனம் விட்டு பேச முன்வந்துள்ளமை மிகவும் முற்போக்கான செயலாகும்.
மைத்திரி அரசின் இந்த முன்னேற்றகரமான நடவடிக்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் அவருடன் சேர்ந்து ஒப்பாரி வைக்கும் இனவாதிகளுக்கும் தக்கபாடமாகும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்."இந்த அரசு தமிழருக்குத் தீங்கு செய்யாது என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. எனவே, உள்நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழர்களை இணைத்துக்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்பும் முன்னேற்றகரமான சகல செயற்பாடுகளிலும் இந்த அரசு விசுவாசமாக ஈடுபடவேண்டும் என்று நாம் கோருகின்றோம்.
இதற்கு எம்மாலான சகல ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக இருக்கின்றோம்" - என்றும் சம்பந்தன் எம்.பி. கூறியுள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர்; கொம்பு முளைத்த பேய்களும் அல்லர்; சிவப்புக் குள்ளர்களும் அல்லர் எனக் கூறி எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை நேற்றும நாடாளுமன்றில் அடியோடு நிராகரித்திருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பயங்கரவாதிகள் எனக் கூறி புலம்பெயர் தமிழர்களை ஒதுக்க நாம் தயாரில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
இலங்கையின் நல்லிணக்கத்தையும், இறைமையையும் பாதுகாத்து ஒன்றுபட்ட நாட்டைக் கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து புலம்பெயர்ந்தோரும் தயாராக உள்ளனர் என்றும் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், அவர்கள் இலங்கைக்கு வந்து நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்றிட்டத்துக்கு ஆதரவளிக்கவேண்டும் என்றும் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார்.
அதேவேளை, உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் தனிஈழம் கேட்கவில்லை எனவும், பிரிக்கப்படாத இலங்கைக்குள் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றே அவர் வலியுறுத்துகின்றார் எனவும் தெரிவித்திருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தேர்தலை இலக்குவைத்து மஹிந்த அரசால் விதிக்கப்பட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மீதான தடை குறித்து மீளாய்வு செய்யப்படவேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அரசின் இந்தக் கருத்துக்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்போதே கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. மேற்படி விடயங்களைக் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
"புலம்பெயர் தமிழர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் எமது உறவுகள். அவர்களுக்கு இந்த நாட்டின் விவகாரங்களில் தலையிட உரிமையுண்டு; இந்த நாட்டுக்கு மீண்டும் வந்து வாழ உரிமையுண்டு. வெவ்வேறு காரணங்கள் நிமிர்த்தம் அவர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறினார்கள்.
சமாதானம், சமத்துவத்துடன் இந்த நாட்டில் வாழமுடியாத சூழ்நிலை அன்று இருந்ததால் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியிருந்தாலும் இங்குள்ள தமிழ் மக்களுக்கு தம்மாலான உதவிகளை அன்றுதொட்டு வழங்கி வருகின்றார்கள்.
அத்துடன் நாட்டின் அபிவிருத்திற்கும் அவர்கள் பாரிய பங்களிப்பைச் செய்யக்கூடியவர்கள். இதனால் பலவிதமான நன்மைகள் எமது நாட்டுக்குக் கிடைக்கும். இதனை இந்த அரசு நன்றாகப் புரிந்துகொண்டுள்ளது.
உள்நாட்டு தமிழர்களையோ, புலம்பெயர் தமிழர்களையோ எடுத்த எடுப்பில் பயங்கரவாதிகள் என்று கூறமுடியாது. பயங்கரவாதிகள் என்று கூறுவதற்கு தக்க சான்றுகள் இருக்கவேண்டும்.
ஆனால், கடந்த மஹிந்த அரசு சிங்கள வாக்குகளின் ஆதரவுடன் தமது ஆட்சியைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பதற்காகப் புலம்பெயர் தமிழர்களுக்குப் 'பயங்கரவாதிகள்' என்ற முத்திரையைக் குத்தியிருந்தது.
தற்போது மைத்திரி அரசு இந்த முத்திரையை நாடாளுமன்றில் வைத்துக் கிழித்தெறிந்துள்ளது.
அனைவரையும் இணைத்துக்கொண்டு ஒன்றுபட்ட நாட்டைக் கட்டியெழுப்பும் மைத்திரி அரசின் இந்தச் செயற்பாட்டை நாம் வரவேற்கின்றோம்"  என்று கூறியுள்ளார்.