பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூன், 2015

வன்னியூர்க் கவிராயருக்கு சொந்த ஊரில் சிலை;வைபவ ரீதியாக திறந்து வைத்தார் சீ.வி


வவுனியா மாவட்டத்தினதும், வன்னிப் பிரதேசத்தினதும் முன்னோடி கவிஞராகிய வன்னியூர்க் கவிராயருக்கு அவருடைய சொந்த ஊராகிய செட்டிகுளம் இலுப்பைக்குளத்தில் நேற்று முன்தினம்  சிலை திறந்து வைக்கப்பட்டது. 
 
வன்னியூர்க் கவிராயர் கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் அவரது சொந்த ஊரில் அமைக்கப்பட்ட சிலையினை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன் திறந்துவைத்தார்.  
 
நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், முன்னோடி இலக்கியவாதிகள், புகழ்பூத்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டனர்.
 
வன்னியூர்க் கவிராயரின் கவிதைகள், சிறுகதைகள் அடங்கிய தொகுப்புக்கள், அவரைப்பற்றிய பல்வேறு பார்வை கொண்ட பதிவுகளான கட்டுரைத் தொகுப்புக்கள் அடங்கிய விழா மலர் என்பன வைபவரீதியாக வெளியிட்டு வைக்கப்பட்டன. 
 
இந்த வெளியீடுகளின் முதற் பிரதி சிறப்புப் பிரதி என்பனவும் விருந்தினர்களால் முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட்டது. 
 
இலக்கிய உலகில் இலைமறை காயாக இருந்து தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்து வன்னி மண்ணுக்குப் பெருமை சேர்த்த பெருமகனாகிய வன்னியூர்க்கவிராயருக்கு வன்னியூர்க் கவிராயர் கலை இலக்கிய பேரவையினர் பெரிய அளவில் விழா எடுத்து, அவரை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.