பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூலை, 2015

இதுவரையில் மொத்தம் 7.5 லட்சம் பேர் பயணம்: விடுமுறை நாட்களில் மட்டுமே மெட்ரோ ரயில்களில் கூட்டம் - பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது. .


.
விடுமுறை தினங்கள் தவிர மற்றைய நாட்களில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அனைத்து
இருக்கைகளும் காலியாக இருக்க ஒருவர் மட்டுமே பயணம் செய்த காட்சி.
.
மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய நாள் முதல் நேற்று முன்தினம் வரையில் மொத்தம் 7.5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். விடுமுறை நாட்களில் மட்டுமே மெட்ரோ ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கட்டணம் அதிகமாக இருப்பதால், பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
ஆலந்தூர் கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவையை கடந்த மாதம் 29-ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். மெட்ரோ ரயில் குளு,குளு பயணம், உயர்தரமான ரயில் நிலையங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய முதல் நாளில் 40 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். அன்று மட்டும் ரூ.17 லட்சம் வசூலானது. ஆனால், மற்ற போக்குவரத்தை காட்டிலும் கட்டணம் அதிகமாக இருக்கிறது. மெட்ரோ ரயில் (ஆலந்தூர் கோயம்பேட்டுக்கு ரூ.40) கட்டணத்தை ஒப்பிடுகையில் மாநகர ஏசி பஸ், ஷேர் ஆட்டோ கட்டணம் குறைவாக இருக்கிறது. இதனால், தினமும் அலுவலகம் செல்வோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய தயங்குகின்றனர்.
ஆனால், சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் பொழுதுபோக்குக்காக வருவதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய 7 நாட்களில் மொத்தம் 3.26 லட்சம் பேர் பயணம் செய்தனர். அதில், சனி, ஞாயிற்றுக்கிழமையில் மட்டுமே 1.56 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய நாள் முதல் நேற்று முன்தினம் வரையில் (21 நாட்கள்) 7.5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதுவே, கட்டணத்தை கணிசமான அளவுக்கு குறைத்தால், பெரும்பாலான மக்கள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய முன்வருவார்கள் என கருதப்படுகிறது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மெட்ரோ ரயில்களில் தினமும் சராசரியாக 30 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர். இதுவே சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை பயணம் செய்கின்றனர். எனவே, கட்டணம் குறைப்பு பற்றி இதுவரையில் எந்த முடிவும் எடுக்கவில்லை’’ என்றனர்.