பக்கங்கள்

பக்கங்கள்

31 ஜூலை, 2015

யாழில் இறப்பர் பாதணிகள் உற்பத்தியை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் ஐங்கரநேசன்


யாழ்ப்பாணத்தில் இறப்பர் பாதணிகளின் உற்பத்தியை வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று  ஆரம்பித்து வைத்துள்ளார்.

 
வட்டு. கிழக்கு சித்தங்கேணியில் இயங்கும் அந்திரான் ஜனசக்தி தோற்பொருள் உற்பத்தியாளர் விற்பனைக் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் பெண்களுக்கான ஒரு தொழில் முயற்சியாகவே இந்த இறப்பர் பாதணிகள் உற்பத்தி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 
 
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கூட்டுறவு அமைப்புகளைப் பலப்படுத்தும் திட்டங்களில் ஒன்றாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாதணிகளின் உற்பத்திக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குதல், சந்தைப்படுத்தல் ஆலோசனைகளை வழங்குதல், மூலப்பொருட்களைக் கொள்வனவு செய்தல் போன்ற தேவைகளுக்கென ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் 3.45 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
 
தென்இலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றால் வட்டு கிழக்கு மாதர் அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் 14 பெண்களுக்கு பாதணி உற்பத்தி தொடர்பான முழுமையான பயிற்சிகள் கடந்த ஒருமாத காலமாக வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே இப்போது உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
 
மனதைக் கவரும் பலவித வண்ணங்களிலும், பல அளவுகளிலும் உருவாக்கப்படும் இறப்பர்ப் பாதணிகளுக்கு ‘ஏஆர்பீ’  எனப் பெயரிடப்பட்டுள்ளது. மிகத்தரம் வாய்ந்ததாக உருவாக்கப்படும் ஏஆர்பீ பாதணிகள் விரைவில் சந்தைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.