பக்கங்கள்

பக்கங்கள்

5 ஆக., 2015

சசிபெருமாள் உடல் எங்கே? சந்தேகம் கிளப்பும் அரசியல்வாதிகள்!



கன்னியாகுமரி:

 சசிபெருமாள் உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில்தான் உள்ளதா? அல்லது வேறு எங்காவது கொண்டு சென்று விட்டார்களா? என அரசியல்வாதிகள் சந்தேகம் கிளப்புகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகேயுள்ள உண்ணாமலைக்கடையில் இருந்த டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி காந்தியவாதி சசிபெருமாள், கடந்த 31ஆம் தேதி அங்கிருந்த செல்போன் டவரில் போராட்டம் நடத்தியபோது திடீரென மரணம் அடைந்தார்.

இதையடுத்து, கன்னியாகுமரி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் மதுவிலக்கு குறித்து தமிழக அரசு அறிவித்தால் தான், சசிபெருமாள் உடலை வாங்குவோம் என கூறியுள்ளனர். இதனால், அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சசிபெருமாள் இறந்த அன்றே ஆசாரிப்பளம் மருத்துவமனையில் அவரது உடலுக்கு மாலை அணிவித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல், கடந்த 2ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தலைவர் வெள்ளையன் ஆகியோர் சசிபெருமாள் உடலக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், நேற்று (3ஆம் தேதி) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதரணி எம்.எல்.ஏ., சசிபெருமாள் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு சென்றார். ஆனால், அவருக்கு மருத்துவமனை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி மறுத்து விட்டது.

இதையடுத்து, தனது கட்சியினருடன் விஜயதரணி எம்.எல்.ஏ. மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, தாசில்தார் வாசுகி அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, நீங்கள் மட்டும் போய் சசிபெருமாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம். மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது எனக் கூறியிருக்கிறார். அதற்கு விஜயதரணி, எனது கட்சியினர் 2 பேரும், பத்திரிகையாளர்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்.
ஆனால், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, டீன் அறைக்கு சென்ற விஜயதரணி எம்.எல்.ஏ. தான் கொண்டு வந்த மலர் வளையம் மற்றும் மாலையை டீனிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்.

அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ''என்னுடன் பத்திரிகையாளர்களைக் கூட அனுமதிக்க மாட்டோம் என்று மருத்தவமனை நிர்வாகம் கூறுகிறது. இதனால், சசிபெருமாள் உடல் இங்குதான் இருக்கிறதா? அல்லது வேறு எங்காவது கொண்டு போய் விட்டார்களா? என்பது போன்ற சந்தேகங்கள் எழுகிறது'' என்று கூறினார்.
இந்நிலையில், இன்று (4ஆம் தேதி) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணு, சசிபெருமாள் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். அவர் நேராக பிணவறைக்கு சென்றார். ஆனால், அங்கிருந்த ஊழியர்கள், டீன் அனுமதி இல்லாமல் கதவை திறக்க முடியாது எனக் கூறியிருக்கின்றனர்.

இதையடுத்து, டீனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்கின்றனர். ஆனால், அவரது தொலைபேசி சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்திருக்கிறது. அப்போது அங்கு வந்த தாசில்தார் வாசுகி, நல்லகண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
அப்போது, டீனிடம் அனுமதி வாங்க ஊழியர் சென்றிருக்கிறார். இப்போது வந்துவிடுவார். சற்று நேரம் காத்திருங்கள் என கூறியிருக்கிறார். இதனால், நல்லகண்ணுவும் 30 நிமிடத்திற்கும் மேலாக காத்திருந்தார். ஆனால், மீண்டும், மீண்டும் காத்திருங்கள், காத்திருங்கள் என்று மட்டும் பதில் வந்திருக்கிறது. இதனால், கோபமடைந்த அவர் எழுந்து அங்கிருந்து சென்று விட்டார்.

அவர் செல்லும், சசிபெருமாளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கொண்டு வந்த மாலையை மருத்துவமனையின் மெயின் கேட்டில், கட்சி தொண்டர்கள் தொங்க விட்டுவிட்டு சென்றிருக்கின்றனர்.
சசிபெருமாள் உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்கு, தொடர்ந்து அனுமதி மறுத்து வருவது, சசிபெருமாள் உடல் அங்குதான் உள்ளதா? அல்லது வேறு எங்காவது கொண்டு சென்று விட்டார்களா? என்ற சந்தேகம் அரசியல்வாதிகளிடையே எழுந்துள்ளது