பக்கங்கள்

பக்கங்கள்

15 ஆக., 2015

புலிகளுக்கு பணம் வழங்கியமை நிரூபிக்கப்பட்டால் மகிந்தவின் குடியுரிமை பறிக்கப்படும்


புலிகளுக்கு பணம் கொடுத்தது நிரூபிக்கப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் கனவு மட்டுமல்ல அவரது குடியுரிமையும் பறிபோகும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இன்று மஹிந்த ராஜபக்ஷவின் காற்று தடைப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காற்று வீச ஆரம்பித்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மஹிந்த ராஜபக்ஷவின் காற்று வீசுவதாக கூறி கடந்த காலங்களில் அவர் பெயர் அரசியலில் வியாபாரம் செய்யப்பட்டது.
 
ஆனால் இன்று மஹிந்த காற்று செயலிழந்து விட்டதோடு அந்தப் பெயரை வியாபாரம் செய்ய முடியாத வங்குரோத்து நிலைமைக்கு முன்னணி தள்ளப்பட்டுள்ளது.
 
இதனால் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம் போடப்பட்டு விளம்பரங்கள் பிரசுரிக்கப்படுகின்றன. மைத்திரி யுகம் ஏற்படுத்தப்படுமென பரப்புரை செய்கின்றனர். மைத்திரி புகழ்பாட ஆரம்பித்துள்ளனர்.
 
போதைப்பொருள், எதனோல் வியாபாரிகள் ஊழல் மோசடிக்கார கும்பல்களால் எவ்வாறு மைத்திரி யுகத்தை ஏற்படுத்த முடியும்? ஜனவரி 8ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட புரட்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
இறுதியாக இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் ஜனாதிபதி மைத்திரி நாம் வெற்றிபெற தமது வாழ்த்துக்களை தெரிவித்தார். தாஜுதீன் கொலை வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் இருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அவர்கள் வாக்கு மூலம் வழங்கியுள்ளனர். தாஜுதீனை ஏன் இவர்கள் கொலை செய்ய வேண்டும். இவர் கடத்தப்பட்ட வேனும் ஷிராந்தி ராஜபக்ஷவிற்கு சொந்தமானது. எக்னெலிகொட காணாமல் போனது தொடர்பில் புலிகள் இயக்கத்தின் புனர்வாழ்வளிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரும், இராணுவத்தில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகளுக்கு புலிப்பெயரே பயன்படுத்தப்பட்டது. அனைத்தும் புலிகள் கணக்கிலேயே சேர்க்கப்பட்டது. பாதுகாப்புத் துறையை சார்ந்தவர் தொடர்பில் கார்ட்டூன் வரைந்ததால் தான் எக்னெலிகொட கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
இன்று எம்மை கொலை செய்வதற்கும் முன்னாள் புலி உறுப்பினர் மற்றும் இராணுவத்தினர் அமர்த்தப்பட்டுள்ளனர். எமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
 
பாதாள உலக கோஷ்டிகளுடனும், புலிகளுடனும், இராணுவத்தில் சிலருடனும் தொடர்புகளை வைத்துள்ளனர். அடிப்படைவாத ஒரு பிக்கு குழுவும் இதில் உள்ளடங்கியுள்ளது. ஊழல் மோசடிகள் குற்றங்களை மறைத்து தப்பிக்கவே மஹிந்த அரசியலுக்குள் வந்துள்ளார்.
 
புலிகளுக்கு பணம் வழங்கியது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன. இது நிரூபிக்கப்பட்ட பின்னர் மஹிந்தவின் பிரதமர் கனவு மட்டுமல்ல, அவரது குடியுரிமையும் பறிபோகும். எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு பிறகு மஹிந்தவின் பல கதைகள் வெளிவரும்.
 
எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆட்சியை வழங்க மக்கள் தீர்மானித்து விட்டனர்’ என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்