பக்கங்கள்

பக்கங்கள்

17 ஆக., 2015

சங்கராபுரம் கலவரம்: பதட்டம் நீடிப்பு



விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் காலனியில் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 2012–ம் ஆண்டு இக்கோவில் தேரோட்ட திருவிழாவின் போது இரு சமுகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அதன் பின்னர் அந்த கோவிலில் திருவிழா நடக்கவில்லை.

இதற்கிடையே காலனியை சேர்ந்தவர்கள் இந்த வருடம் திருவிழா நடத்த முடிவு செய்தனர். ஆனால், திருவிழா நடத்தினால் மீண்டும் மோதல் ஏற்படும் என கருதி போலீசார் அனுமதிக்கவில்லை. ஆனால், காலனி தரப்பினர் வற்புறுத்தியதன் பேரில் கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ. மாலதி இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் போலீஸ் பாதுகாப்புடன் தேரோட்டம் நடத்தவும் பிரச்சினைக்குரிய வழியாக தேரோட்டத்தை நடத்தகூடாது என்று கூறி அனுமதி அளிக்கப்பட்டது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடத்த நேற்று இரவு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. தேர் அலங்கரிக்கும் பணி நடந்து வந்தது. முன்னெச்சரிக்கையாக அங்கு 50–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இரவு 7 மணி அளவில் அப்பகுதியில் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போது ஊர் பகுதியை சேர்ந்த 500–க்கும் மேற்பட்டவர்கள் திபுதிபுவென காலனி பகுதிக்குள் புகுந்தனர். அங்கு தேர் மீதும், வீடுகள் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் 8 வீடுகள் எரிந்து நாசமானது. தேரும் சேதமானது.

இதனால் அப்பகுதி மக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வெடிகுண்டு வீசியவர்களை தடுக்க முயன்றும் இயலவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர நாயர் தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் அங்கு கூடி இருந்த ஊர் தரப்பினர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

பதிலுக்கு ஊர் தரப்பினர் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில், 8 போலீசாருக்கு படுகாயம் ஏற்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர நாயர் லேசான காயம் அடைந்தார். காயம் அடைந்த போலீசார் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்தி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் பற்றி அறிந்த கலெக்டர் லட்சுமியும் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.  அங்கு மேலும் கலவரம் ஏற்படாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. மேலும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 500–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.