பக்கங்கள்

பக்கங்கள்

13 ஆக., 2015

வித்தியா படுகொலை வழக்கு! கைதான ஒன்பது பேரில் நால்வருக்கு நேரடித் தொடர்பு! நீதிமன்றுக்கு சி.ஐ.டி. அறிக்கை


புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களில் நால்வருக்கு நேரடி தொடர்புள்ளதாகவும் ஏனையோர் அந்த கொடூரத்துக்கு உதவி ஒத்தாசை புரிந்தவர்கள் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பித்துள்ளது.
வித்தியா படுகொலை வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போதே இரு வேறு அனுமதிகளின் பேரில் இரு மாதங்கள் சந்தேக நபர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்தமை தொடர்பிலான அறிக்கையை நீதிமன்றுக்கு சமர்ப்பித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபர்கள் தொடர்பிலான மேற்படி விடயத்தை நீதிவானுக்கு அறிவித்தனர்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களான பூபாலசிங்கம் இந்திரகுமார் (வயது 40), பூபாலசிங்கம் ஜெயகுமார் (வயது 34), பூபாலசிங்கம் தவகுமார் (வயது 32) , மகாலிங்கம் சஷீந்திரன், தில்லைநாதன் சந்திரஹாஷன், சிவதேவன் குஷாந்தன், பழனி ரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன் அல்லது கண்ணன் சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் ஆகியோரை விசாரணை செய்ததில், இந்த கொடூரம் திட்டமிட்ட வகையிலேயே இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் இதன் போது மன்றில் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் வித்தியாவின் மூக்குக் கண்ணாடியையும் இந்த விசாரணைகளின் இடையே தாம் மீட்டுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் மன்றுக்கு தெரிவித்திருந்தனர்.
அரச இரசாயண பகுப்பாய்வுகளுக்கும், டி.என்.ஏ. பரிசோதனைகளுக்கும் அனுப்பட்ட தடயங்கள் தொடர்பிலான ஆய்வு அறிக்கை இன்னும் தமக்கு கிடைக்கவில்லை என தெரிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரி, அவை கிடைத்ததும் மேலும் பல விடயங்களை உறுதிப்படுத்தக் கூடியதாய் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
மாணவி வித்தியா படுகொலை வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கடந்த தவணை வழக்கின் போது பாதுகாப்பு பிரச்சினையையை மேற்கோள் காட்டி கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள் ஒன்பது பேரும் நேற்று புலனாய்வுப் பிரிவின் விஷேட பஸ் வண்டி ஊடாக ஊர்காவற்றுரைக்கு எடுத்து வரப்பட்டு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது நீதிமன்றில் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாய் உள்ளிட்ட உறவினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
எனினும் கடந்த தவணையின் போதும் அதற்கு முன்னரும் பாதிக்கப்பட்ட தரப்பு என்ற ரீதியில் வித்தியாவின் குடும்பத்தவர் சார்பில் ஆஜரான எந்த சட்டத்தரணியும் நேற்று நீதிமன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
கடந்த தவணை சிரேஷ்ட சட்டத்தரணி தமக்குரிய அச்சுறுத்தலை மேற்கோள் காட்டி இந்த வழக்கில் இருந்து விலகியிருந்ததுடன் கடந்த தவணை முதல் தலைநகரில் இருந்து சென்ற சகோதர இன சட்டத்தரணிகள் மூவர் வித்தியாவின் குடும்பத்தவர் சார்பில் ஆஜராகியிருந்தனர். எனினும் அவர்களையும் நேற்று மன்றில் அவதானிக்க முடியவில்லை.
இந்நிலையில் சந்தேக நபர்களை கூண்டில் ஏற்றியதும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் செய்த விசாரணையின் அறிக்கையை நீதிவானிடம் கையளித்தார்.
சுவிஸ் குமார் அல்லது பிரகாஸ் என அழைக்கப்படும் மகாலிங்கம் சிவகுமார், நிசாந்தன், சந்திரகாசன், ஜெயக்குமார், தவக்குமார் ஆகியோரின் ஆலோசனையின்படி இந்த படுபாதக செயல் இடம்பெற்றுள்ளது.
இந்த பாதக செயலுடன் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நால்வருக்கு நேரடி தொடர்பு உள்ளது. ஏனையோர் அதற்கு உதவி ஒத்தாசை செய்துள்ளனர்.
கைதாகியுள்ள சந்தேக நபர்கள் எமது விசாரணைகளின் போது இதனை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் மிகத் திட்டமிட்டு இந்த குற்றத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இந்நிலையில் இவர்களை விசாரணை செய்யும் போது பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான குஷாந்தனின் வீட்டிலிருந்து மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை நாம் கைப்பற்றியுள்ளோம். இது இந்த வழக்கின் பிரதான தடையப் பொருட்களில் ஒன்றாகவே நாம் பார்க்கின்றோம்.
சந்தேக நபர்கள் தொடர்பிலும் தடயங்கள் தொடர்பிலும் டி.என்.ஏ. மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பட்ட மாதிரிகள் மற்றும் தடயங்கள் தொடர்பிலான அறிக்கை எமக்கு இன்னும் கிடைக்கவில்லை.
எனவே சந்தேக நபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கோருகின்றோம். என குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை சுருக்கத்தை நீதிமன்றத்தில் முன்வைத்ததைத் தொடர்ந்து கூண்டில் இருந்த சந்தேக நபர்களை நீதிவான் நோக்கினார்.
இதன் போது சந்தேக நபர்கள் ஒன்பது பேரும், குற்றப் புலனய்வுப் பிரிவு பொலிஸார் தம்மிடம் சிங்களத்திலேயே கதைத்து தங்களை வற்புறுத்தியே வாக்குமூலமும், கையெழுத்தும் பெற்றுக்கொன்டதாக குறிப்பிட்டனர்.
இதன் போது இடைமறித்த பொலிஸார் மேற்படி ஒன்பது சந்தேகநபர்களுக்கும் சிங்களம் ஓரளவு நன்றாகவே தெரியும் எனவும், இவர்களிடம் ஒழுங்கான முறையிலேயே விசாரணை இடம்பெற்றதாகவும் அதன் பிரகாரமே வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆறாவது சந்தேகநபர் டீ.என்.ஏ பரிசோதனையை மீண்டும் மேற்கொள்ள வேண்டுமென்று நீதிவானிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அதேநேரம் மற்றுமொரு சந்தேகநபரான குஷாந்தன் என்பவர் வித்தியாவின் கண்ணாடி தனது வீட்டிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுவது அப்பட்டமான பொய் எனவும், தன்னைப் பொலிஸார் அழைத்துச் சென்று ஒரு கடையில் வைத்தே அந்த கண்ணாடியை வாங்கி வந்து தனக்கு முன்னாலேயே தனது வீட்டில் வைத்து விட்டு எடுத்ததாகவும் நீதிவானுக்கு தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்திய சந்தேக நபர்கள் தம்மை பிணையில் விடுதலை செய்யக் கோரினர்.
எனினும் நீதிபதி எஸ். லெனின்குமார், தமக்குள்ள அதிகாரத்துக்கு அமைய குற்றத்தின் பாரதூரத்தை கருத்தில் கொண்டும் பிணை வழங்க முடியாதெனவும், இந்த வழக்கு மேல்நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் போது அங்கு பிணை பெறுவதற்கு முயற்சி செய்யலாமெனவும் கூறினார்.
அதேவேளை சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் தமக்காக எந்த ஒரு சட்டத்தரணியும் ஆஜராவதற்கு தயங்குவதோடு, பயப்படுகின்றார்கள் என நீதிமன்றில் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.
இதனைச் செவிமடுத்த நீதவான், உங்களுக்காக சட்டத்தரணிகளை ஆஜராகும் விடயத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாதென்றும் ஆயினும் ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கு யாராவது அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தலை மேற்கொண்டால் அது குறித்து தான் நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ள வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை எதிர்வரும் 26.08.2015 அன்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிவான் எஸ்.லெனின்குமார் அதுவரை சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் 26ம் திகதிக்கு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுப்பதாகவும் கூறி ஒத்திவைத்தார்.