பக்கங்கள்

பக்கங்கள்

3 ஆக., 2015

டாஸ்மாக்கை அடித்து நொறுக்கிய மாணவர்கள்: போலீஸ் தடியடியால் பதற்றம்!





 சென்னை அமைந்தகரையில் உள்ள டாஸ்மாக் கடையை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திடீரென அடித்து நொறுக்கினர். அப்போது, மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிற
து.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட வந்த காந்தியவாதி சசிபெருமாள், கடந்த சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின்போது உயிரிழந்தார்.
சசிபெருமாளின் திடீர் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால், தமிழகம் முழுவதும் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள், அரசியல் கட்சியினர், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக்கை அகற்ற கோரிய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இன்று காலை பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கல்லூரி வளாகம் முன்பு உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு பிரிவினர் சேத்துபட்டு செனாய்நகரில் உள்ள போலீஸ் பூத் அருகில் இருந்த டாஸ்மாக் கடைக்குள் புகுந்து அங்கிருந்த மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மாணவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினர். இதில் 50 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டம் தொடர்பாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பின் செயற்குழு உறுப்பினர் நிவேதா உள்பட 12 பேரை காவல்துறையினர் வேனில் ஏற்றி சேத்துபட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதில் கொடுமை என்னவென்றால், போராட்டத்தை ராயபுரத்தை சேர்ந்த கிரி மற்றும் அவரது நண்பர் சுமேஷ் ஆகியோர் வேடிக்கை பார்த்துள்ளனர். அப்போது, கிரி என்பவரை காவல்துறையினர் பிடித்துச் சென்றனர். காவல்துறையினர் வாகனத்து பின்னால் தனது இருசக்கர வாகனத்தில் நண்பரை பின் தொடர்ந்து சேத்துபட்டு காவல்நிலையத்துக்கு சுமேஷ் சென்றதுதான் வேதனை.
இதனிடையே, மாணவர்களின் போராட்டத்தால் டாஸ்மாக் கடையை ஊழியர்கள் பூட்டிவிட்டு ஓடிவிட்டனர். சுமார் அரை மணி நேரம் கழித்து கடையை தட்டும் சத்தம் கேட்டுள்ளது. இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து கடையை திறந்து பார்த்தனர். அப்போது இரண்டு மாணவர்கள் கடைக்குள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இரண்டு மாணவர்களையும் காவல்துறையினர் பிடித்துச் சென்றனர்.

இந்த டாஸ்மாக் கடை குடிசை பகுதி அருகில் அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையால் நாங்கள் தினம் தினம் அவஸ்தை அடைந்து வருகிறோம் என்று அந்த பகுதியை சேர்ந்த அஜீதா என்ற பெண் வேதனையுடன் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த டாஸ்மாக் கடையில் குடிப்பவர்கள் நிர்வாணமாக இந்த பகுதியில் கிடப்பார்கள். இது குறித்து சேத்துபட்டு காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனறு கூறினார்.

டாஸ்மாக்கை அகற்றக்கோரி நடந்த போராட்டத்தில் மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.