பக்கங்கள்

பக்கங்கள்

17 ஆக., 2015

இறந்தவர் போல நடித்த திமுக பிரதிநிதி திடீர் மரணம்:ஆத்தூரில் சோகம்


மதுவிலக்கு ஆர்ப்பாட்டத்தில் இறந்தவர் போல நடித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக பிரதிநிதி திடீரென்று மரணமடைந்துள்ளது ஆத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் கடந்த 10 ஆம் தேதி சேலம் கிழக்கு மாவட்ட திமுக  சார்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுகவின் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமை வகித்தார்.


ஆர்ப்பாட்டத்தின் போது ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த முன்னாள் வார்டு செயலாளர் சேட்டு என்கிற செல்வராஜ் என்பவர் மது குடித்ததால், இறந்து போனது போல் சித்தரிக்கப்பட்ட நிலையில்  பிணமாக நடித்துப் போரட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பிணத்துக்கு வைப்பது போல் அவரது நெற்றியில் ஒரு ரூபாய் காசும்  ஒட்டப்பட்டு மாலைகள் போடப்பட்டிருந்தன.

மேலும் வாய்க்கட்டு கட்டி பிளாஸ்டிக் நாற்காலியில் பிணத்தை அமர வைப்பது போன்று சேட்டுவை அமர வைத்தனர். பின்னர் அவரைச்  சுற்றி பெண்கள் அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுவது போன்று தத்ரூபமாக நடித்தனர்.

இந்நிலையில் மறுநாள் காலையில் சேட்டுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அவரது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனைக்  கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச்  சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த அவரை நேற்று முன்தினம் ஆத்தூர் தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர் இதையடுத்து சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சேட்டு பரிதாபமாக இறந்தார்.

இறந்தது போல் நடித்த சேட்டு உண்மையிலேயே இறந்து விட்ட சம்பவம் சேலம் மாவட்ட திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது